

ஜிப்மர்
ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் புதுச்சேரியில் செயல்படுகிறது. சுருக்கமாக ஜிப்மர் என அழைக்கப்படும் இந்த மருத்துவ மையத்தில் தற்போது பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 106 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பணியிடங்கள் உள்ள மருத்துவ துறைகளில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, கைனகாலஜி, டென்டிஸ்ட்ரி, பீடியாட்ரிக்ஸ், ஆப்தமாலஜி, இ.என்.டி. டெர்மடாலஜி, ரேடியோ டயக்னாஸிஸ், சைக்கியாட்ரி, ஆர்த்தோபேடிக்ஸ் போன்ற 11 பிரிவுகளில் பணிகள் உள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 26-10-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.jipmer.edu.in மற்றும் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
டாடா மருத்துவ மையம்
டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். பல்வேறு இடங்களில் இதன் ஆராய்ச்சி மையம் - மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தற்போது இந்த மருத்துவமனைகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
வாரணாசியில் உள்ள ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனையில் 168 பணியிடங்களும், கவுகாத்தியில் உள்ள புவனேஸ்வர் பரூக் புற்றுநோய் மையத்தில் 61 பணியிடங்களும், விசாகப்பட்டினத்தில் உள்ள பாபா புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் 117 பணியிடங்களும், சண்டிகரில் உள்ள டி.எம்.சி. புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 25 பணியிடங்களும் உள்ளன. மொத்தம் 371 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பிளஸ்-2 படித்தவர்கள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு 19-10-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விவரங்களை /tmc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்..