களரி: வர்மங்களும்.. மர்மங்களும்..

களரி வர்மங்களும், மர்மங்களும் நிறைந்தது. பெண்கள் மனதையும், உடலையும் வலுப்படுத்திக்கொள்ள களரி பயிற்சி பெறலாம். தன்னம்பிக்கை குறைந்த பெண்கள் இதில் ஈடுபட்டால், அவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
களரி: வர்மங்களும்.. மர்மங்களும்..
Published on

பெண்களுக்கு இது அதிக மனப்பக்குவத்தையும் தரும். களரி பயிற்சி பெறும் பெண்கள் எத்தகைய ஆபத்தையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெறுவார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பயிற்சியை பெறக் கூடாது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் கொண்டவர்கள் களரி பயிற்சி பெறுவதை தவிர்க்கவேண்டும்.

களரிப் பயிற்சி ஐந்து நிலைகளைக் கொண்டது. அதன் விவரம்:

முதல் நிலையை மெய்தரி என்று அழைக்கிறார்கள். இது இரண்டு கட்டங்களை கொண்டது. முதல் கட்டத்தில் கால்களை இலகுவாக்கும் வித்தைகளை கற்றுத்தருவார்கள். கடுமையான இந்த பயிற்சியை முடிக்கும்போது பெண் களால் கால்களை 12 கோணங்களில் நீட்டவும் மடக்கவும் முடியும். களரி கலையை பிரயோகிக்கும்போது அவர்கள் கால்களை விரும்பியபடி எல்லாம் செயல்படுத்த இந்த முதல் கட்ட பயிற்சி அவசியமானதாக இருக்கும்.

முதல் நிலையின் இரண்டாவது கட்டத்தை மெய்பயற்று என்று அழைப்பார்கள். மெய் என்றால் உடல். களரி பயிற்சிக்கு ஏற்றபடி உடல் முழுவதையும் பக்குவப்படுத்துவது, இந்த இரண்டாவது கட்ட பயிற்சியாகும். இதை செய்யும்போது உடல் மிகுந்த ஆற்றலை பெறும். அடுத்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை பெறவேண்டியது இருந்தாலும் அதை செய்து முடிக்கும் அளவுக்கு மனதிலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இரண்டாவது நிலையை கோல்தாரி என் கிறார்கள். கோல் என்றால் குச்சி. குச்சிகளை பிரயோகம் செய்யும் முறைகளை இதில் கற்றுத்தருவார்கள். இந்த இரண்டாவது நிலையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. முதல் கட்டத்தை கெட்டுக்காரி என்று அழைக்கிறார்கள். 7 அடி உயரம் கொண்ட குச்சிகளை பயன்படுத்தி இந்த பயிற்சியை தருவார்கள். இது சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சி. சிலம்ப குச்சிகளை வைத்து எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்த பயிற்சி உதவும்.இதன் இரண்டாவது கட்டத்தில் சிறிய குச்சிகளை கொண்டு எதிரிகளை மடக்குவதற்கு கற்றுத்தருவார்கள். இதற்கு முச்சான் என்று பெயர். இந்த பயிற்சியில் அசுர வேகத்தில் இயங்க வேண்டியதிருக்கும். இதை முறையாக கற்றுக்கொண்டால் ஒரு நிமிடத்தில் 150 முறை குச்சியால் வீசி எதிரியை நிலைகுலையச்செய்யலாம். இந்த பயிற்சியினை பெற்றால் உடல் பம்பரமாக சூழலும்.மேற்கண்ட நிலைகளில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்கள் ஒட்டா என்ற அடுத்தகட்ட பயிற்சியை பெறுவார்கள். இது ஒருவித வர்மக்கலை பயிற்சி. அதனால் இதனை கவனமாக செய்யவேண்டும். எதிரியை வர்ம புள்ளிகளில் அடித்து வீழ்த்துவது இதன் முக்கிய சாராம்சம்.

மூன்றாவது நிலையான அங்கதரியில் ஆயுத பிரயோகம் செய்ய கற்றுத்தருவார்கள். திரி சூலம், பட்டாக்கத்தி, குத்துவாள், உருமி, கேடயம் போன்றவைகளை இதில் பயன்படுத்தவேண்டும். எதிரிகளை ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குவது மற்றும் தடுப்பது போன்றவைகளை இதில் கற்றுக்கொள்ளலாம்.

நான்காவது நிலையில் ஆயுதங்கள் எதுவுமின்றி வெறுங்கையால் தற்காப்பு பயிற்சி பெறவேண்டும். அதனால் அதற்கு வெறும்கை என்று பெயர். இந்த பயிற்சி அசாதாரணமானது. கையாலே எதிரியை அடித்து வீழ்த்தும் முறை இதுவாகும். இது எதிரியின் உயிருக்கு ஆபத்தானது என்பதால் அனைவருக்கும் இதை குரு கற்றுத்தருவதில்லை. ஒழுக்கம், உண்மை, பக்குவம், சமூக அக்கறை கொண்டவர் களுக்கே இதை கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஐந்தாவது நிலை பயிற்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. இது குருவாகவும் சிகிச்சையாளராகவும் ஆவதற்கான பயிற்சியாகும். நான்கு நிலைகளையும் நன்றாக கற்றுத் தேர்ந்தவர்கள், சமூக நலனில் அக்கறைகொண்டவர்கள் இந்த பயிற்சி நிலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு ஆயுர்வேத மசாஜ் செய்யவும், காயமடைந்தவர் களுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றுத்தருவார்கள். இறுதியாக சில ரகசிய வித்தை பிரயோகமுறைகளையும் கற்பிப்பார்கள்.

இந்த ஐந்து நிலை பயிற்சியிலும் முழுமைபெற்ற பெண்கள் சிறந்த களரி வீராங்கனை யாகிவிடுவார்கள். அடுத்தவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நிலைக்கும் உயர்ந்துவிடுவார்கள். இவர்களிடம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். ஈடுபட்ட துறையில் சாதிக்கும் வல்லமையையும் பெற்றிருப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com