கட்டுமான கழிவுகளிலும் வீடு கட்டலாம்..!

பயன்படுத்தப்பட்ட மரங்கள் மற்றும் மண் ஓடுகளை பயன்படுத்திக் குறைந்த செலவில் இயற்கைச் சூழல் நிறைந்த வீட்டைக் கட்டியிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த கட்டிடவியலாளர் ஜோசப் மாத்யூ.
கட்டுமான கழிவுகளிலும் வீடு கட்டலாம்..!
Published on

14 ஆண்டுகளாக வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் பணியாற்றி வரும் இவர், அது குறித்து கூறுகையில், "வீடு கட்டுவதைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுவையும், ஆர்வமும் உண்டு. தங்கள் விருப்பத்தை வீட்டில் பிரதிபலிக்க அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, ஒரு வீடு கட்டும்போது என் சொந்த யோசனைகளை அதிகம் பயன்படுத்துவதில்லை. வீடு கட்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்து கிறேன்.

அதுபோல, என் சொந்த வீட்டைக் கட்டும்போதுகூட, என்னுடைய விருப்பங்களே பிரதி பலித்தன. என்னுடைய ஆசையின்படி, பழைய பொருட்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் நிலையான குளுகுளுவென இருக்கும் வீட்டை கட்டியிருக்கிறேன். கடந்த 2015-ம் ஆண்டு 4,500 சதுர அடியில் வீட்டைக் கட்டத் தொடங்கினேன். அவசரப்படாமல் பொறுமையாக படிப்படியாகக் கட்டினேன். கொரோனா பொது முடக்கத்தின்போதுதான் வீடுகட்டும் பணியை விரைவுபடுத்தினேன்.

இந்த வீட்டைக் கட்டுவதற்கு இடிக்கப்பட்ட இரண்டு பள்ளிகளிலிருந்து மரங்கள், மண் ஓடுகள், கற்களைப் பயன்படுத்தினேன். கற்கள் மட்டும் 45 லோடு வரை கொண்டு வந்தேன். வீட்டுச் சுற்றுப்புற சுவருக்கு அந்த கற்களைப் பயன்படுத்தினேன். பழைய மற்றும் புதிய மரங்கள் 95 சதவிகிதம் பயன்படுத்தியிருக்கிறேன். மரங்களால் செலவு குறைந்தாலும் தரத்தில் நான் சமரசம் செய்து கொள்வதில்லை. சோதனை செய்து தரமாக இருந்தால் மட்டுமே பழைய பொருட்களை வாங்குவேன்.

இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களிலிருந்து கிடைத்த கற்களைக் கொண்டே வீட்டின் 40 சதவிகித கட்டுமானங்களை முடித்தேன். மீதம் சிமெண்ட் செங்கற்களைப் பயன்படுத்தினேன். இந்த வீடு குளிர்ச்சியாக இருப்பதால், நாங்கள் ஏ.சி. உபயோகிப்பதில்லை. கோடைக்காலங் களிலும் வீடு குளுகுளுவென இருக்கிறது. இந்த அளவுக்கு கான்கிரீட் வீடு கட்டினால், ரூ.1.2 கோடி செலவாகும். ஒரு கட்டிடக்கலைஞராக, இந்த வளங்களை எளிதில் அணுகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததால், குறைந்த செலவில் வீட்டைக் கட்ட முடிந்தது என்று நினைக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com