இலவச வை-பை மூலம் படித்து ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கிய ‘போர்ட்டர்’

போர்ட்டராக இருந்து ஐ.ஏ.எஸ் அந்தஸ்துக்கு தன்னை உயர்த்தி இருக்கும் ஸ்ரீநாத்தின் பூர்வீகம் கேரள மாநிலத்திலுள்ள மூணாறு.
இலவச வை-பை மூலம் படித்து ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கிய ‘போர்ட்டர்’
Published on

மொபைல் போன்கள் குழந்தைகள், இளைஞர்களை தவறான பாதைகளுக்கு அழைத்து செல்லக்கூடியது என்ற கருத்தை பலரும் முன்வைக்கிறார்கள். ஆனால் அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக்கொள்பவர்கள் தங்களின் தனித்திறன்களையும், ஆளுமைத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கும் செல்கிறார்கள். அதனை நிரூபித்துக்காட்டியவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார், ரெயில்வேயில் போர்ட்டராக வேலை பார்க்கும் ஸ்ரீநாத். இவர் ரெயில் நிலையத்தில் கிடைக்கும் இலவச வை-பை இணைப்பை பயன்படுத்தியே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து, அதில் தேர்ச்சி பெற்றும் அசத்தி இருக்கிறார்.

போர்ட்டராக இருந்து ஐ.ஏ.எஸ் அந்தஸ்துக்கு தன்னை உயர்த்தி இருக்கும் ஸ்ரீநாத்தின் பூர்வீகம் கேரள மாநிலத்திலுள்ள மூணாறு. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் படிப்பை முடித்ததும் ரெயில் நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட போர்ட்டராக பணியை தொடங்கி இருக்கிறார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு குடும்ப செலவுகள் அதிகரித்திருக்கிறது. தனது வருமானம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்தவர், மாற்று திட்டம் குறித்து ஆலோசித்திருக்கிறார். தன் குழந்தையின் எதிர்கால தேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடாத வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார்.

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இரவு நேர பணியையும் தொடர்ந்திருக்கிறார். ஆனாலும் ஒரு நாள் வருவாய் 500 ரூபாயை தாண்டவில்லை. அது குடும்ப தேவைகளுக்கு போதுமானதாக இல்லாததால் கல்வி மூலம் வாழ்க்கை தரத்தை மேலும் வலுப்படுத்த தீர்மானித்திருக்கிறார். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றி இருக்கிறது. அதனை செயல்படுத்துவதற்காக பயிற்சி மையம் சென்று படிப்பதற்கு வருமானமும், குடும்ப சூழலும் ஒத்துழைக்கவில்லை.

தன்னிடம் இருந்த மொபைல் போனில் போட்டி தேர்வு குறித்த தகவல்களை தேடி படித்தார். அந்த சமயத்தில்தான் ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி செயல்பாட்டுக்கு வந்தது. பணி நிமிர்த்தமாக மும்பை ரெயில் நிலையத்திற்கு வந்தவர் அங்கு கிடைத்த இலவச வை-பை வசதியை பயன்படுத்தி படிக்க தொடங்கினார்.

போட்டித்தேர்வுக்காக எந்தவொரு புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கவில்லை. ஹெட்போன், சிம்கார்டு, மெமரிகார்டு வாங்குவதற்கு மட்டுமே பணத்தை செலவிட்டிருக்கிறார். முதல்கட்டமாக கேரள அரசு பணிக்கான போட்டித்தேர்வை எழுதியவர், அதில் வெற்றி பெற்று அசத்திவிட்டார். ஆனாலும் அவருக்குள் ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அணையா ஜோதியாக சுடர்விட, சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத தொடங்கிவிட்டார். ஆனாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. மூன்று முறை தோல்வியையே தழுவி இருக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் தேர்வை எதிர்கொண்டவர் 4-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

ரெயில்வே ஸ்டேஷனில் போர்ட்டராக இருந்து, நாட்டின் முன் வரிசை அரசு அதிகாரியாக தேர்வாகி இருக்கும் அவரது அசாத்திய பயணம் போட்டித்தேர்வு எழுதும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

சமூக ஊடகங்கள், இணைய வசதியை இன்றைய இளம் தலைமுறையினர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் தங்கள் இலக்குகளையும், கனவுகளையும் அடைய முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com