பறவைகளின் அரசன்

கொழுத்த உடல், வளைந்த அலகு, கூர்மையான பார்வை, வளைநக கால்கள், விரிந்த இறக்கை, தேர்ந்த வேட்டை யுக்தி போன்ற சிறப்பியல்புகளுடன் கம்பீரமான தோற்றம் பெற்று, ‘பறவைகளின் அரசன்’ என்ற அந்தஸ்தையும் பெற்றது கழுகு.
பறவைகளின் அரசன்
Published on

அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கழுகை கருதுகிறார்கள். அசைவப் பறவையான இவைதான் பொது இடங்கள், காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சியை உண்டு உலகின் துப்புரவுத் தோழனாக வலம் வருகிறது. கழுகு பற்றிய சுவையான தகவல்களை அசை போடுவோமா...

* கழுகு அக்சிபிட்ரிடே என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பறவைகளில் சிறந்த வேட்டையாடும் திறன் கொண்டது கழுகு. இது முற்றிலும் அசைவ உண்ணி பறவை.

* கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. இதில் ஐரோப்பிய-ஆசிய பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கழுகு இனங்கள் உள்ளன. அமெரிக்க கண்டத்தில் வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் 9 வகை கழுகு இனங்கள் உள்ளன.

* கழுகுகளில் சிறியது தென் நிக்கோபார் தீவுகளில் காணப்படும் சர்ப்ப கழுகாகும். இவை 40 சென்டி மீட்டர் நீளமும், சுமார் 500 கிராம் எடையும் கொண்டவை. கடல் கழுகான ஸ்டெல்லரின் கழுகு, கழுகு இனங்களில் பெரியது. இது அதிகபட்சம் 7 அடி நீளமும், 15 பவுண்டு, (6.7 கிலோ) எடையும் கொண்டிருக்கும். வெள்ளைவால் கழுகு அதிகபட்சம் 7 அடி 2 அங்குலம் வரை வளர்ந்தாலும், இதன் எடை சற்றே குறைவாக இருக்கும்.

* கழுகுகளில் பெண் கழுகு, ஆண் கழுகைவிட சற்றுப் பெரிதாக இருக்கும்.

* மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டவை கழுகுகள். இவற்றின் கண்களில் ஒரு சதுர மில்லிமீட்டர் பரப்பில் 10 லட்சம் பார்வை செல்கள் உள்ளன. இதனால் மனிதனைவிட 2 லட்சம் மடங்கு துல்லியமான பார்வைத்திறன் கொண்டது. மிக தூரத்தில் இருந்தும் உணவினைக் கண்டுபிடிக்க இந்த கூர்மையான பார்வைத்திறன் உதவுகிறது. அதிக உயரத்தில் பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக்கூட கழுகால் காண முடியும். இரையைக் கண்டதும் பல மடங்கு வேகத்தில் கீழே பாய்ந்து வரும் கழுகுகள் அலகு மற்றும் வளைந்த நகங்கள் கொண்ட கால்களால் இரையைக் கவ்விக் கொண்டு போய்விடும். அவற்றை கொன்று உண்ணும்.

* அமெரிக்காவின் தேசியச் சின்னம் கழுகுதான். இதேபோல ஜெர்மனி, ஆஸ்திரியா, மெக்சிகோ, எகிப்து, போலந்து ஆகிய நாடுகளிலும் கழுகு பறவை மரபுச் சின்னங்களாக உள்ளன. சில நாடுகளில் கழுகுகள் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன.

* கோல்டன் ஈகிள் எனப்படும் கழுகு இனம், சிறிய நரிகள், காட்டுப்பூனைகள், முயல்கள், இளம் மான்கள் ஆகியவற்றையும் வேட்டையாடிவிடும்.

* வழுக்கைத் தலை கழுகுகள், வழுக்கையுடன் காணப்படுவதில்லை. அதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. ஆங்கிலச் சொல்லான பைபால்டு என்ற சொல்லிற்கு திட்டுத்திட்டாக வண்ணங்கள் கொண்டது என்று பொருளா கும். இந்த வகை கடல் கழுகுகளுக்கு தலையில் வெள்ளை நிறம், உடலில் கருப்பு நிறம், இறகுகள் மற்றும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் காணப்படுவதால் இதற்கு பைபால்டு ஈகிள் என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி பால்டு ஈகிள் (வழுக்கை கழுகு) என்று அழைக்கப்படுகிறது.

* உலகில் கழுகு இனம் வெகு வேகமாக அருகி வருகிறது. காடுகளை அழித்தல், விவசாய நிலங்களில் பயன்படுத்தும் நச்சு மருந்துகளால் இறக்கும் எலிகள் மற்றும் பிராணிகளை உண்பதால் இறத்தல், உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கி மடிதல் என பல காரணங்களால் கழுகுகள் அழிந்து வருகின்றன. சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் தேசியப் பறவையான கழுகைக் காக்கும் சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அழிவின் அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகை சேர்த்து பாதுகாப்பது சுற்றுச்சூழலுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com