

மாஸ்கோ,
கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி, மாஸ்கோ நகர வீதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று, புவி சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து பூமியை சுற்றி வந்த முதல் உயிரினம் என்ற சாதனையை படைத்தது. திரும்பி வரவே முடியாத ஒரு பயணத்திற்கு சோவியத் விண்வெளி ஆய்வாளர்களால் தேர்வு செய்யப்பட்ட ‘லைக்கா’ என்ற அந்த நாய், விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது.
ரஷிய போல்ஷ்விக் புரட்சியின் 40-வது ஆண்டு நினைவு தினத்தை சிறப்புக்கும் வகையில், 1957, நவம்பர் 7-ந்தேதியுடன் ஒத்துப்போகும் வகையில் ஒரு விண்வெளி திட்டத்தை அறிவிக்குமாறு சோவியத் விண்வெளி ஆய்வாளர்களிடம் அந்நாட்டின் அப்போதைய பிரதமர் நிகிதா குரோசேவ் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சோவியத் பொறியாளர்கள் ‘ஸ்புட்னிக்-2’ திட்டத்தை அவசர அவசரமாக செயல்படுத்த தொடங்கினர்.
முன்னதாக ‘ஸ்புட்னிக்-1’ திட்டம் மூலம் ஆளில்லாத விண்வெளி பயண திட்டத்தை சோவியத் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்தி இருந்தனர். அந்த திட்டம் மூலம் மனிதனால் தயாரிக்கப்பட்ட விண்கலம் ஒன்று 1957-ம் அண்டு அக்டோபர் 4-ந்தேதி வரலாற்றில் முதல் முறையாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது. இதன் அடுத்தகட்டமாக ‘ஸ்புட்னிக்-2’ திட்டத்தில் ஏதேனும் ஒரு விலங்கை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று சோவியத் விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
அதன்படி தெருக்களில் சுற்றித் திரிந்த பெண் நாய்களை பிடித்து வந்து, அவற்றில் ஒரு நாயை அவர்கள் தேர்வு செய்தனர். பெண் நாய்கள் அளவில் சிறியதாகவும், பழக்கப்படுத்துவதற்கு எளிதாகவும் இருந்ததால் அவற்றை அவர்கள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட நாய்தான் ‘லைக்கா’.
லைக்காவை விண்கலத்தில் வைத்து ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, பின்னர் அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் இந்த திட்டங்கள் பெரும்பாலும் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த பயணம் திரும்பி வரமுடியாத ஒருவழிப் பயணம் என்பதையும் விஞ்ஞானிகள் உணர்ந்திருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக லைக்கா உயிரிழந்துவிடும் என அவர்கள் கருதினர். அதுமட்டுமின்றி, வலி இல்லாமல் லைக்காவை கருணை கொலை செய்யும் வகையில் விஷம் கலந்த உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளையும் விஞ்ஞானிகள் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விஞ்ஞானிகள் சற்றும் எதிர்பாராத வகையில், லைக்கா மிக மோசமான மரணத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. விண்கலத்தின் வெப்பக் கட்டுப்பாடு மற்றும் குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் உண்டான அதீத வெப்பம் (ஹைபர்தெர்மியா) மற்றும் பீதியின் காரணமாக லைக்கா உயிரிழந்தது. இருப்பினும் மனித வரலாற்றில் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து, பூமியை சுற்றி வந்த முதல் உயிரினம் என்ற பெருமையை லைக்கா பெற்றது.
முன்னதாக லைக்காவிற்கு பயிற்சி அளித்தவர்கள், அந்த நாயின் சோக முடிவால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகினர். அந்த நாயின் பயிற்சியாளர்களில் ஒருவரான விளாடிமிர் யாஸ்டோவ்ஸ்கி, லைக்காவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முந்தைய நாள், அதனை தனது வீட்டிற்கு கொண்டு சென்று குழந்தைகளுடன் விளையாடவிட்டார். நாளை உயிரிழக்கப்போகும் லைக்காவிற்கு அதன் கடைசி தருணங்கள் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
மனிதர்களின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஏராளமான விலங்குகளின் உயிர்களும், மனிதர்களின் உயிர்களும் தியாகம் செய்யப்பட்டுத்தான் இன்றைய நவீன விண்வெளி ஆய்வு இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இதில் ‘லைக்கா’ செய்த தியாகம் என்றென்றும் மறக்க முடியாதது. அதனை போற்றும் விதமாக மாஸ்கோவில் லைக்காவிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.