

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் குறுகியதாகவும், எளிதில் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதால் ஆங்கில வார்த்தைகளை அரசியல் கட்சியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை பொதுமக்க ளுக்கு பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக தெரிவிப்பது வழக்கம்.ஒரு காலத்தில் தலைவர்களின் அறிக்கைகள் தூய தமிழில், எதுகை-மோனையுடன் எளிமையாக இருந்தது. அதனால் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சாமானிய மக்களிடம் எளிமையாக சென்றடைந்தது.
சமீப காலமாக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த இளைஞர்கள், தற்போது அரசிய லில் அதிக ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர். இது ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட இளைஞர்களில் 'ஜென்-சி' தலைமுறையினர் பெரும்பாலும் தங்களது பேச்சு வழக்கில் அதிக அளவில் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் சினி மாக்களில் வரும் ஆங்கில 'பஞ்ச்' வசனங்களை அதிகம் டிரண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே அவர்களுக்கு புரியும் மொழியில் தங்களது அறிக்கை மற்றும் பேட்டிகளில் அரசியல் தலைவர்களும் அதிக அளவில் ஆங்கில வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்கள்.
அதன் விளைவாக 'டம்மி டாடி', 'டம்மி சி.எம்.', 'சி.எம். சார்', 'வாட் புரோ', 'ஆபரேஷன் மோட்', 'சைலண்ட் மோட்', 'ஸ்லீப் மோட்', 'பார்ட் டைம் சி.எம்.', 'புல்டைம் கண்டென்ட் கிரி யேட்டர்', 'சர்க்கஸ் சர்க்கார்', 'பவர் செண்டர்'. 'வாஷிங் மெஷின்', 'சோபா மாடல்'. 'பேட் பார்ட்டி', 'பிரேக்கிங் பேட்', 'ஜீரோ அக்கவுண்டபிளிட்டி'. 'டேமேஜ் கன்ட்ரோல்', 'ரிவர்ஸ் கியர்'. 'அப்யூசிவ் வாரியர்ஸ்'. என்பது உள்பட பல்வேறு ஆங்கில வார்த்தைகள் சமீபத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பேட்டி மற்றும் அறிக்கைகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தலைவர்கள் உதிர்த்த இதுபோன்ற ஆங்கில வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசுபொருளாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி, தேசிய அளவிலான அரசியல் தாக்கம், ஜென்-சி இளைஞர்களை தங்களுடைய கருத்துகள் சென்றடையவேண்டிய தேவை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
குறிப்பாக எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் குறுகியதாகவும், எளிதில் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதால் ஆங்கில வார்த்தைகளை அரசியல் கட்சியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தமிழ் என்பது தமிழர்களின் உயிருக்கு நிகராக போற்றப்படும் நிலையில், அரசியல் கட்சியினர் ஆங்கில கலப்பு சொற்களை பயன்படுத்துவது மொழி ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது தவறல்ல என்றாலும், தமிழில் எளிதாக சொல்லக்கூடிய வாக்கியங்களுக்குக்கூட ஆங்கில சொற்களை பயன்படுத்துவது தேவையற்றது என்பது தமிழ் ஆர்வலர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
தமிழை அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல், கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் அன்றாட தகவல் பரிமாற்றங்களிலும் பிழையின்றி முழுமையாக பயன்படுத்தவேண்டும் என்பதே மொழி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.