இனி பிளாஸ்டிக் பைகள் ஒழியட்டும்.. மரவள்ளி கிழங்கில் இருந்து புதிதாக மக்கும் பைகள் தயாரிப்பு.!

மென்மையான உணர்வைத் தரும் இந்தப் பைகள், 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்டவை.
இனி பிளாஸ்டிக் பைகள் ஒழியட்டும்.. மரவள்ளி கிழங்கில் இருந்து புதிதாக மக்கும் பைகள் தயாரிப்பு.!
Published on

சென்னை,

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு முன்புவரை வயர் கூடைகளிலும், பாத்திரங்களிலும் பொருட்கள் வாங்கி வந்த மக்கள், பிளாஸ்டிக் பைகள் வந்த பிறகு, கைகளில் எதையும் எடுத்துச் செல்வதே இல்லை.

பிளாஸ்டிக் பைகளின் விலையும் குறைவு என்பதால், கடைக்காரர்களும் அந்த பைகளிலேயே பொருட்களை போட்டு பொதுமக்களுக்கு விநியோகித்து வந்தனர். ஆனால், இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கும் தன்மை கிடையாது என்பதால், இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளும் தெரியாமல் சாப்பிட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது கடைகளில் சோதனையிட்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தாலும், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து தடுக்காததால், பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மரவள்ளி கிழங்கில் இருந்து புதிதாக மக்கும் பைகள் தயாரிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, மக்கும் பைகளும் தயாரிக்கப்படுவது உலகெங்கும் கவனம் பெற்றுள்ளது. பார்க்கவும், தொடவும் லேடெக்ஸ் போன்ற மென்மையான உணர்வைத் தரும் இந்தப் பைகள், 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்டவை. இந்தப் பைகளை சுடு தண்ணீரில் போட்டால் சில நிமிடங்களிலேயே முழுவதுமாக கரைந்து விடும்.

ஒரு வேளை இவை கடலில் கலந்தால் கூட, கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக மீன்கள் இதை உணவாகக் கூட உட்கொள்ளலாம். வழக்கமான பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், மர வள்ளிக்கிழங்கு பைகள் இயற்கையோடு இயற்கையாக மிக விரைவில் இணைந்து விடும் என்பதால், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இதை ஒரு பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com