

இந்திய நாட்டு மக்கள் அனைவராலும், தேசத்தந்தை என்று அழைக்கப்படுபவர், காந்தியடிகள். இவர் குஜராத் மாநிலம் போர்பந்தர் என்ற இடத்தில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்தார். கரம்சந்த் காந்தி- புத்திலிபாய் இருவரும், இவரது பெற்றோர். காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். பள்ளி பருவத்திலேயே தனது 13-ம் வயதில் கஸ்தூரிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.
18 வயதில் வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில், இங்கிலாந்து சென்று பட்டப் படிப்பை தொடர்ந்தார். படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பியவர், இங்கு சில காலம் வழக்கறிஞர் பணியாற்றினார். பின்னர் தன் நண்பர் ஒருவர் மூலமாக தென்னாப்பிரிக்காவில் வழக் கறிஞர் பணிக்காக சென்றார். அங்கு தலைப்பாகையோடு வாதாட, காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். ஒருநாள் அங்குள்ள ரெயிலில் பயணிப் பதற்காக, முதல் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் அங்கிருந்த அதிகாரி, காந்தியை முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கவில்லை. அதற்கு அவரது நிறம்தான் காரணம் என்று அதிகாரி சொன்னபோது, தென்னாப்பிக்காவில் உள்ள இந்தியர் களையும், கறுப்பின மக்களையும் நினைத்து காந்தி மிகவும் வருந்தினார். இதுவே அவருக்கு அரசியலில் ஈடுபாடு வர முதன்மை காரணம்.
தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து, காந்தி இந்தியா திரும்பினார். இந்நிலையில் இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை அரங்கேறியது. எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆங்கிலேயேர்களின் செயலை கண்டித்து, ஒத்துழையாமை இயக்கம் ஏற்படுத்தினார். இந்த இயக்கம் சில காலம் மட்டுமே உயிர்ப்புடன் இருந்தது. காந்தியடிகள் நடத்திய போராட்டங்களில் மிகவும் முக்கியமானது, உப்பு சத்தியாகிரகம். உப்புக்கு வரி விதிக்கப்பட்டதால், அகமதாபாத்தில் இருந்து 23 நாட்கள் நடைபயணமாக தண்டியை அடைந்தார். இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து ஆங்கிலேயர்கள் மிரண்டனர்.
சுதந்திரத்தின் இறுதி கட்டத்தில் நடத்தப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கமும், முக்கியமான போராட்டம்தான். காந்தியின் அற வழியில், நாடு முழுவதும் தீவிரமாக இந்தப் போராட்டம் நடந்தது. தொடர் போராட்டத்தின் நிறைவாக, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேயர்கள் முன்வந்தனர். 1947-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரம், காந்தியின் அகிம்சையால் கிடைத்த பொக்கிஷம்.
சுதந்திரம் பெற்ற அடுத்த வருடத்தில், அதாவது 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி, நாதுராம் கோட்சேவால், காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும் அகிம்சையை போதித்து வந்த காந்திக்கு, இறுதியில் துப்பாக்கி குண்டுகளால் மரணம் நிகழ்ந்தது, இந்திய மக்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவரது இறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் என்று அனுசரித்து வருகிறோம்.