

ஆனால் இயற்கை விஷயத்தில் நிறைய பேரிடம் அது இல்லாமல் போய்விட்டது. இயற்கையை காப்பாற்றும் அளவுக்கு சக்தி இல்லாவிட்டாலும் அதனை அழிக்காமலாவது இருக்கலாம்.இயற்கை வளம் குறைந்து போனால் நம் வாழ்க்கை வளமும் குறைந்து போகும். எல்லோருக்கும் பாதகமாகிவிடும். நம் வசதிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். சுற்றுச்சூழலை பற்றி பலரும் யோசிப்பதில்லை. எல்லாவற்றையும் சட்டம் போட்டு கண்காணிக்க முடியாது. நமக்கும் கொஞ்சம் பொறுப்புணர்வு வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியேறும் கார்பன் உலகளவில் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது. நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழலையாவது பாதுகாத்துக்கொள்ளும் விழிப்புணர்வு அவசியம் வேண்டும். வீட்டை சுற்றி பசுமையான செடி, கொடிகளை வளர்க்கலாம். வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் கொடிகளை படர விடலாம். கழிவு நீர் தேங்கும் இடமாக இருந்தால் சேற்றில் விளையும் கிழங்கு வகைகள், வாழை மரங்களை நடலாம். அவை செழிப்பாக வளர்ந்து பூத்து குலுங்குவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சுற்றுச்சூழலை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு பாடமாகவே போதிக்கலாம். இயற்கையை நேசிக்கும் பண்பை சிறு வயதிலேயே அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் பிறந்த நாளுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக மரக்கன்றுகளை வழங்கி இயற்கை ஆர்வத்தை ஊக்குவிக்கலாம்.
வீட்டின் அழகான விஷயமே தோட்டம்தான். சிறிய இடமாக இருந்தாலும் அங்கு தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். தினமும் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு குழந்தைகளை பழக்கலாம். அது இயற்கையை நேசிக்கும் ஈடுபாட்டை வளர்த்தெடுக்கும். இயற்கையை நேசிப்பவர்களை எப்போதும் தனிமை பின் தொடராது. இயற்கையுடனேயே பொழுதை மகிழ்ச்சியாக கழித்துவிடுவார்கள்.நாட்டில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. விழுந்து விடும் நிலையில் இருக்கும் பழைய மரங்களை வெட்டலாம். அதில் மரம் சார்ந்த பர்னிச்சர் பொருட்களை தயார் செய்யலாம். ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக நான்கு மரங்களை நட வேண்டும். இயற்கை மீது ஆவல் உண்டாக வேண்டும். அதற்காக மலர் கண்காட்சி, இயற்கை வளம் மிக்க இடங்களுக்கு அடிக்கடி சென்று வர வேண்டும். குழந்தைகளையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இயற்கையை நேசிக்கும் பண்பை அவர்களிடம் விதைத்தால்தான் அடுத்த தலைமுறைக்கும் அந்த வழக்கத்தை பின்தொடர செய்ய முடியும். காடு வளம் அனைவருக்கும் சொந்தமானது. அதனை அழிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இன்றும் கிராம பகுதிகளில் சமையல் செய்வதற்கு விறகு கட்டைகளை பின்பற்றும் வழக்கம் இருக்கிறது. அவர்களிடம் பயோ கியாஸ் பற்றி விளக்கி கூறலாம். குறிப்பாக மாட்டு சாணத்தை என்ன செய்வது என்று யோசிப்பவர்களிடம் பயோ கியாஸ் தயாரிப்பு முறைகளை விளக்கி கூறி, அதனை பயன்படுத்த ஊக்குவிக்கலாம். மழை நீரை முறையாக சேமித்து பயன்படுத்துவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் தண்ணீர் வீணாகுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
இயற்கை வளங்கள் பசுமையான சூழலை தரக்கூடியவை. குளிர்ச்சியான நிழலையும் தரக்கூடியவை. சாலையோர மரங்கள் வாகன சத்தங்களை பெருமளவில் குறைக்க உதவுகின்றன. தூசுகளை வடிகட்டி தூய காற்றை வழங்கவும் துணைபுரிகின்றன. மரங்கள் பறவை இனங்களின் இருப்பிடங்களாகவும் விளங்குகின்றன. அதில் வாழும் பறவைகள் சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் பணியையும் மேற்கொள்கின்றன. சூரிய கதிர்கள் அதிகம் விழும் இடங்களில் சோலார் எனர்ஜியை பயன்படுத்தலாம். வீட்டு தேவைகளுக்கு சோலாரை பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.
உடலை வலிமையாக்குவதற்கு அசைவ உணவே சிறந்தது என்று பலர் கருதுகிறார்கள். உடல் வலிமைக்கு தேவையான அத்தனையையும் இயற்கை நமக்கு தருகிறது. ஆபரணத்திற்காக பவளம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கடலின் அடிவாரத்தில் இந்த பவளம் உருவாகிறது. இதில்தான் சிறுசிறு கடல்வாழ் உயிரினங்கள், மீன்கள் தங்களின் இருப்பிடங்களை அமைத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றன. பவளங்கள் குறைந்தோ, அழிந்தோ போனால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். இந்த பவளங்கள் உருவாகுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதனை அபகரித்து
ஆபரண அலங்காரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். அலங்காரத்துக்காக கடல் வளத்தை சுரண்டுவதால் ஏற்படும் அழிவை ஈடு செய்வது கடினம். இயற்கை வளம் நம்மை காப்பாற்றும் தாய் போன்றது. இதனை உணர்ந்து இயற்கையை காக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
வீட்டின் அழகான விஷயமே தோட்டம்தான். சிறிய இடமாக இருந்தாலும் அங்கு தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். தினமும் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு குழந்தைகளை பழக்கலாம். அது இயற்கையை நேசிக்கும் ஈடுபாட்டை வளர்த்தெடுக்கும்.