புலிகளை காப்போம்...!

இன்று (ஜூலை 29-ந் தேதி) சர்வதேச புலிகள் தினம்.
புலிகளை காப்போம்...!
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பீடு நடைபோடும் புலி நமது தேசிய விலங்கு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. புலி பார்ப்பவரை கவரும் அழகிய வண்ணமும், மிடுக்கும் கொண்ட கம்பீரமான விலங்கு ஆகும். புலிகளையும் அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திடவே சர்வதேச புலிகள் தினம் 2010-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. புலிகள் உயிர்வாழ்வது நம் கையில் என்பது 2019-ம் ஆண்டு புலிகள் தினத்தின் குறிக்கோள் ஆகும்.

சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, மலைபடுகடாம் ஆகிய நூல்கள் புலியின் தோற்றத்தையும் வண்ணத்தையும் வெகுவாக வியந்து போற்றுகின்றன. சங்க காலத்தில் புலிக்கு உழுவை, வேங்கை, வயம், வல்லியம், பல்வரி என பல்வேறு காரணப் பெயர்கள் உண்டு. விரல் நகங்களால் தனது இரையை உழுதலால் உழுவை என்று பெயர். அதே போல் விரைந்து ஓடுவதால் வல்லியம் எனவும், வேங்கை மரத்தின் மலர்களைப் போன்ற நிறத்தை ஒத்ததால் வேங்கை என்றும் பல பெயர்களில் புலிகள் சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகில் ஒன்பது வகையான புலிகள் இருந்தன. இதில் துருக்கியிலுள்ள காஸ்பியன் புலி, ரஷியாவில் உள்ள அமுர் புலி, தென் கிழக்கு ஆசியாவிலுள்ள புலிகளும் அடங்கும். ஜாவா மற்றும் பாலி புலி இனங்கள் முழுவதும் அழிந்து போய்விட்டன. உலக அளவில் தற்போது மொத்தமாக சுமார் 3,890 புலிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அது வெகுவாக சுருங்கி 1973-ம் ஆண்டு 1,220-ஆக குறைந்து போய் விட்டது.

புலி பரந்த நிலப்பரப்பில் அலைந்து திரியும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு எல்லைக்குள் வாழும் விலங்கு ஆகும். ஒவ்வொரு புலியும் தனது சிறு நீரால் எல்லையை வகுத்து கொள்கிறது. புலிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு சுருங்கிவிட்டன. மேலும் தோலுக்காகவும், எலும்புக்காகவும் புலிகள் வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 4 ஆயிரம் புலிகள் உள்ளன. அதில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக புலிகள் மனிதனை வேட்டையாடுவதில்லை. மனிதனை கண்டால் ஒதுங்கி போய்விடும். வயதான புலிகள் வேட்டையாட முடியாத பட்சத்தில் தான் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கிறது.

புலிகள் நல்ல எண்ணிக்கையில் இருக்கும்படி பராமரிக்கப்பட்டால் அவற்றிற்கு உணவாகும் மான், காட்டெருமை போன்ற தாவர உண்ணி களும் உணவாகப் பயன்படும் காட்டுப் பயிர் பச்சைகளும் நல்ல நிலையில் இருக்க ஏதுவாகும். எனவே நமது இயற்கைச் சூழல் சமன்பாட்டிற்கு புலிகளை நாம் செவ்வனே பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் வரும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன. இந்தியாவில் 18 மாநிலங்களில் புலிகள் காணப்படுகின்றன. அவற்றின் பாதுகாப்புக்காக கடந்த 46 ஆண்டுகளில் நாடெங்கும் 50 புலிகள் காப்பகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை, நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் ஆகும். அரசு எடுத்த பல்வேறு சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தற்போது 2226-ஐ எட்டியுள்ளது. தமிழ் நாட்டில் 226 புலிகள் உள்ளன. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் பொதுமக்கள் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சூழல் மேம்பாட்டுத் திட்டம் புலிகளைப் பாதுகாத்ததுடன், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத்தரம் வழி கோலியது.

புலியின் உறுமல் பெயர் பெற்றது. அது சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்கக்கூடியது. புலி இரவில் வேட்டையாடும். தான் வேட்டையாடியதில் சுமார் 27 கிலோ கறியை ஒரே நாளில் உட்கொள்ளும்.

இந்த உணவு செரிமானம் ஆக பல நாள் பிடிக்கும். எனவே தொடர்ந்து பல நாட்கள் பட்டினியாக கிடக்கும். தனது எச்சில் மூலமாக காயங்களை ஆற்றிக்கொள்ளும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப நம்மைச் சுற்றி வாழும் அனைத்து வகையான உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை ஆகும். புலிகளின் வாழ்விடங்களை அவற்றின் இயற்கைத் தன்மை மாறாமல், துண்டாடாமல் பாதுகாப்பது நம் கடமை. புலியின் நெற்றியில் உள்ள வடிவத்திற்கு சீன மொழியில் ராஜா என்று அர்த்தமாம். நமது காடுகளில் ராஜாவாகச் சுற்றித் திரியும் கவின் மிகுந்த புலிகளையும், அவற்றின் வாழ்விடமான காடுகளையும் போற்றிப் பாதுகாக்க இந்நன்னாளில் சூளுரைத்துச் செயல்படுவோம்.

- டாக்டர் எஸ் பாலாஜி, முன்னாள் முதன்மை வனத்துறைத் தலைவர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com