

இந்தநாள் இனிய நாள் என்பதும், இந்தநாள் நொந்த நாள் என்பதும் உள்ளபடி உள்ளத்தின் மாயத்தோற்றங்கள் தான். உலகத்தில் ஆகச்சிறந்த ஆயுதமும், ஆகச்சிறந்த கேடயமும் நம் உள்ளம்தான். நம்மைப் பள்ளத்தில் தள்ளுவதும், சிகரத்தின் உயரத்தில் அமர்த்துவதும் நம் உள்ளம்தான். உள்ளத்தில் உள்ளதுதான் உதட்டில் சொற்களாய் வெளிவருகிறது. உள்ளத்தில் உள்ளவற்றில் பலவற்றைச் சொல்ல முடிகிறது, சிலவற்றை நம்மால் யாரிடமும் சொல்லாமல் அப்பால் தள்ளமுடிகிறது. உள்ளம் கள்ளமானால் வாழ்வு பள்ளமாகும் என உணர்ந்த மகாகவி பாரதியார் மனதில் உறுதிவேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்று சொன்னார்.
நம் உள்ளத்தின் கதவுகளை மூடிவிட்டு வெகு இறுக்கமாகச் ஜன்னல்வழியாக நாம் உலகை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறோம். நம்மைக் கவனிக்கத் தொடங்க வேண்டுமென்றால், நம் உள்ளத்தின் மொழியை நாம் அனுபவப் பூர்வமாய் உணரவேண்டும். மூச்சடக்கித்தான் முத்தெடுக்க வேண்டும், உள்ளத்தை அடக்கித்தான் உன்னதத்தை அடையமுடியும். நாம் இழந்த ஒன்று, அல்லது நம்மை விட்டுப் பறிக்கப்பட்ட ஒன்று, வேறோர் வடிவத்தில் நம்மிடம் எப்படியாவது வந்து சேர்ந்தே தீரும் என்று உடைந்த உள்ளங்களுக்குச் சொல்லியாகவேண்டும். அதனால்தான் உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி என்று கவியரசு கண்ணதாசன் பாடினார். எப்போதெல்லாம் உள்ளம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் வாழ்வில் கடந்த மகிழ்வான நிமிடங்களை நினைத்துக்கொள்ளுங்கள், உங்கள் துயரங்கள் தூர ஓடும். இறந்தபின் எடுத்துச் செல்ல முடியா சுமைகளைத் தேடித்தான் சுகமென்று கருதி நாம் காலம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் பார்வையில்தான் இருக்கிறது, பார்வை மாறினால் நம் பாதையும் மாறும். நம் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் ஒரு சாதாரணமான பார்வையாளனாக நின்று, பார்த்து ரசிக்கப் பழகிவிட்டால் நம்மை ஏதும் பாதிக்காது. பாலுக்குள் ஒளிந்திருக்கிற நெய்யை, மோருக்குள்ளே மத்து சுற்றிச்சுழன்று வெண்ணெயாக்கி வெளியே கொண்டு வருவதுபோல் நம் துயரங்களை உயரத்திலிருந்து இறக்க நம் உள்ளமெனும் அரூப ஏணியால் மட்டுமே முடியும். மூங்கிலுக்குள் உட்புகுகிற காற்று இசையாக வெளிவருகிறமாதிரி, இந்த உலகில் குழந்தைகளாகப் புகுந்த நாம் இனிமையாக மேலெழுந்து மனிதர்களாய் செல்ல வேண்டாமா? அனுபவித்து, உணர்ந்து, வாழ்ந்து பாருங்கள் வலிகளிலும் வழிகள் பிறந்திருக்கும். வாழ்வெனும் பயணத்தை வழி தெரியாமல் தொடங்கியதும், இலக்கு தெரியாமல் இயல்பாக வாழ்ந்து, ஏதோவொரு புள்ளியில் சட்டென்று நிறுத்தி விலகுவதும்கூட வேறுபட்ட அனுபவமே! ஓடா நதி, குட்டை என்று பெயரெடுத்துக் குறுகிப்போய்விடுகிறது. நின்றுகொண்டே இருப்பதைவிடச் சென்றுகொண்டே இருப்பது சாலச்சிறந்தது. எல்லாம் சில காலமே என்ற உண்மையில் உறுதியாயிருப்பவர்கள், காலமான பின்னும் காலமாகாமல் வாழ்கிறார்கள். காயங்களை மாயங்களாக்கும் வித்தை உள்ளத்திற்கு மட்டுமே உண்டு. வீட்டிற்கு உள்ளே செல்வதற்குத் தடையாய் அடைத்திருந்த அதே கதவுதான் நாம் வெளியே செல்வதற்குத் தன்னைத் திறந்து அகண்டத்தைக் காட்டுகிறது. சமுத்திரத்தைச் சலிக்க சல்லடையைக் கொண்டு செல்ல முயல்வதுபோல் காலம் முழுக்க நாம் முயல்கிறோம், முடியாத பலவற்றுக்கும். நாம் வலிந்து உருவாக்கிய சிக்கல்களை நம்மால் மட்டுமே சிக்கெடுக்க முடியும்,
ஒருநாள்தான் வாழ்வென்றாலும், காலையில் மலர்ந்து மணத்தால் நாசி நுகரவைத்து, வண்ணங்களால் அழகை உணர்த்தி, மாலையில் வாடிக் கீழே விழும் மலர்களிடமிருந்து நம் உள்ளங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் உறுதிதான். உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துபோகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது, எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள், காலப்போக்கில் காயமெல்லாம் மாறிப்போகும் மாயங்கள் எனும் கவிஞர் பா.விஜய்யின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. உதிர்ந்த சருகுகளை மீண்டும் இலையாய் துளிர்த்துப் புதிப்பித்துக்கொள்கிற மரங்கள் மாதிரி, நாமும் தினமும் நம்மைப் புது உள்ளங்களால் புதுப்பித்துக்கொள்வோம். வாழக் கிடைத்த நாட்களை வாய்ப்பாகக் கருதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடி வாழ்வோம்.
- பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், தனியார் கல்லூரி, திருநெல்வேலி.