இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டால் பொதுமக்கள் பதற்றமடையாமல் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
Published on: 

உலகம் முழுவதும் சுனாமி பேரிடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 5-ந்தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுனாமி என்பது கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அல்லது நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளால் உருவாகும் மிகப்பெரிய கடல் அலைத் தொடர் ஆகும். இந்த அலைகள் கடற்கரையை அடையும்போது மிகுந்த வேகத்துடனும் சக்தியுடனும் நிலப்பகுதிக்குள் புகுந்து பெரும் உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

நவம்பர் 5-ந்தேதி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்க நவம்பர் 5-ந்தேதி தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் ஜப்பானின் வரலாற்றுச் சம்பவம் ஒன்று உள்ளது. கடந்த 1854-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகளை உணர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, தனது நெற்கதிர்களுக்கு தீ வைத்து கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, மக்கள் உயரமான பகுதிகளுக்குச் சென்று உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பர் 5-ந்தேதி தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை நவம்பர் 5-ந் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. சுனாமி அபாயத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள், பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இந்தியாவை உலுக்கிய 2004-ம் ஆண்டு சுனாமி

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான சுனாமி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை கடுமையாகப் பாதித்தது. குறிப்பாக, தமிழ்நாட்டின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், வீடுகள், மீன்பிடிப் படகுகள், வாழ்வாதாரங்கள் என ஏராளமானவை சேதமடைந்தன.

இந்தப் பேரிடர், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தியது. இதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள்

கடலுக்கு அடியில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், கடலடி நிலச்சரிவுகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்றவை சுனாமி உருவாகக் காரணமாக அமையலாம். சுனாமி ஏற்படுவதற்கு முன்பாக சில இயற்கையான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது.

- கடலோரப் பகுதியில் வலுவான நிலநடுக்கம் ஏற்படுதல்.

- கடல் நீர் திடீரென உள்வாங்கி, கடற்கரைப் பகுதி வழக்கத்திற்கு மாறாகத் தோன்றுதல்.

- கடலில் இருந்து வழக்கத்திற்கு மாறான பெரும் இரைச்சல் கேட்டல்.

- கடல் அலைகள் இயல்புக்கு மாறாக வேகமாகவும் உயரமாகவும் கரையை நோக்கி வருதல்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், கடற்கரையைப் பார்வையிடவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்காமல் உடனடியாக உயரமான பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

பாதுகாப்பு வழிமுறைகள்

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டால் பொதுமக்கள் பதற்றமடையாமல் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களையும் வெளியேறும் வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவசரத் தேவைக்கான குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பதும் அவசியமாகும்.

சுனாமியின் முதல் அலைதான் மிகப்பெரிய அலையாக இருக்கும் என்று கருதக்கூடாது. அடுத்தடுத்த அலைகளும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதிகாரிகள் பாதுகாப்பு அறிவிப்பைத் திரும்பப் பெறும் வரை கடற்கரைப் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது.

முன்னெச்சரிக்கையே உயிர்காக்கும்

சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுப்பது, பொதுமக்களுக்குப் பேரிடர் பயிற்சி அளிப்பது, பாதுகாப்பான வெளியேற்றத் திட்டங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் பெருமளவில் குறைக்க முடியும்.

எனவே, உலக சுனாமி விழிப்புணர்வு தினமான இன்று, சுனாமி குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வதுடன், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.

X