பாலிவுட்டுக்கு செல்லும் மலையாள இயக்குனர்

கேரளாவில் 2007-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதைப் பெற்ற திரைப்படம், ‘ராத்திரி மழா.’ இந்தப் படத்தின் வாயிலாக எடிட்டராக சினிமாத் துறைக்குள் நுழைந்தவர், மகேஷ் நாராயணன்.
பாலிவுட்டுக்கு செல்லும் மலையாள இயக்குனர்
Published on

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு இவர்தான் எடிட்டிங் பணியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எடிட்டிங் மட்டுமின்றி, திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையோடு வலம் வருகிறார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் டேக் ஆப். 2014-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற கலவரத்தின்போது, அங்கே மாட்டிக்கொண்ட இந்திய மருத்துவ செவிலியர்களின் நிலையைப் பற்றியதாக இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. 2017-ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் தேசிய விருது, கேரள அரசின் விருது என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியது, மலையாள உலகில் உள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அடுத்ததாக 2020-ம் ஆண்டு இவர் இயக்கிய சி யூ சூன் என்ற திரைப்படம் வித்தியாசமான முயற்சியாகும். இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் படம் முழுவதும் கம்ப்யூட்டர் திரையில் பேசுவது போன்றே படத்தை உருவாக்கியிருந்தனர். இந்தப் படமும் வெற்றிப்படமாகவே அமைந்தது. அடுத்ததாக பகத்பாசில் நடிப்பில் மாலிக் என்ற திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு, மகேஷ் நாராயணனுக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு பான்ந்தோம் ஹாஸ்பிட்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜோஷி ஜோசப் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், இந்தியாவின் சுகாதாரத்தைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய கதை ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட இருக்கிறது.

இந்திய சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் சம்பவங்களைப் பற்றி இந்தக் கதை பேசும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை பாலிவுட்டில் தல்வார், ராஸி உள்ளிட்ட சிறந்த படங்களைத் தயாரித்த, ப்ரீத்தி ஷஹானி தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com