பழத்தை விரும்பும் 'மனித ஓநாய்'

பார்ப்பதற்கு நரியின் தோற்றத்திலும், ஓநாயின் தோற்றத்திலும் காணப்படும் விலங்கினம், மனித ஓநாய். இதனை ஆங்கிலத்தில் ‘Maned Wolf’ என்று அழைக்கிறார்கள்.
பழத்தை விரும்பும் 'மனித ஓநாய்'
Published on

 நரி, ஓநாய் தோற்றத்தில் இருந்தாலும் இது கிரிசோசியோன் (Chrysocyon) என்னும் உலகத்தில் உள்ள ஒரே ஒரு 'தங்க நாய்' இனமாகும். அர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, பெரு, பராகுவே என்று பரந்து காணப்பட்ட இந்த விலங்கு, அங்கெல்லாம் அழிந்து விட்டது. தற்போது தென் அமெரிக்கா பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

வளர்ச்சியடைந்த ஒரு மனித ஓநாய், 20 முதல் 30 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். தலை முதல் உடல் வரையான இதன் நீளம், 100 செ.மீ. ஆகும். இதன் வால் 45 செ.மீ. நீளமும், காதுகள் 18 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இது ஒரு தனிமையை விரும்பும் விலங்காகும். இனப்பெருக்கத்தின்போது மட்டுமே தனக்கான துணையைத் தேடும். அதுவரை தன்னிச்சையாகவே, தனக்கான உணவுகளைத் தேடிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இந்த மனித ஓநாய், குளிர் மற்றும் மேகமூட்டமான நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். இவை திறந்தவெளிகளை உணவு தேடுவதற்கும், கரையோர காடுகள் போன்ற மூடிய பகுதிகளை ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்துகின்றன.

 இவற்றின் வேட்டையாடும் நேரம், சூரிய அஸ்தமனத்திற்கும் நள்ளிரவிற்கும் இடைப்பட்ட நேரமாகும். இந்த விலங்கு, தன்னுடைய இரையை கழுத்து அல்லது முதுகில் கடித்து, தேவைப்பட்டால் இரையை கடுமையாக குலுக்கிக் கொல்லும். இவற்றின் இனப்பெருக்க காலம் நம்பர் முதல் ஏப்ரல் வரையான காலகட்டமாகும். கருவுறுதல் 60 முதல் 65 நாட்கள். ஒரே நேரத்தில் இரண்டு முதல் 6 வரை குட்டி களை ஈனும். குட்டிகள் பெரிய விலங்கு களைப் போல செந்நிறமாக இல்லாமல், கருமையான ரோமம் கொண்டிருக்கும். ஒவ்வொரு குட்டியும் சராசரியாக 450 கிராம் எடையோடு இருக்கும். மனித ஓநாய் தன்னுடைய குட்டிகளை ஓராண்டு காலத்திற்கு உணவு கொடுத்து, வேட்டையாட கற்றுக் கொடுத்து பாதுகாக்கும்.

சிறிய பாலூட்டிகள் (அணில், முயல்), பறவைகள் மற்றும் மீன்கள் உட்பட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்றது. ஆனால் அதன் உணவின் 50 சதவீதத்திற்கும் அதிகமாக கரும்பு, கிழங்குகள் மற்றும் பழங்கள் உட்பட காய்கறிப் பொருள் ஆகும். இவற்றின் முக்கிய உணவாக 'ஓநாய் ஆப்பிள்' இருக்கிறது. இது ஒரு தக்காளி போன்ற பழம் ஆகும். இந்த பழங்கள் மனித ஓநாய் உணவில் 40 முதல் 90 சதவீதம் வரை உள்ளன. இந்த ஆப்பிளை, மனித ஓநாய்கள் தீவிரமாக தேடி உண்கின்றன. இந்தப் பழ மரங்களை அதிக அளவில் விதைப்பதும் இந்த மனித ஓநாய்கள்தான். இந்த ஆப்பிளை சாப்பிடும் இந்த மனித ஓநாய்கள், தங்களுடைய கழிவின் வாயிலாக பல இடங்களில் இந்த பழ மரங்கள் விளைய வழிஏற்படுத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com