

அந்த அளவுக்கு நினைவாற்றல் குறைந்துகொண்டிருக்கிறது. அதுபோல் நாம் எல்லாவற்றுக்கும் எந்திரங்களையே சார்ந்திருப்பதால், மனதில் கணக்கிட்டுச் சொல்லும் ஆற்றலும் குறைந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நினைவாற்றல், கணக்கிட்டு கணித்துச் சொல்லும் ஆற்றல் ஆகிய இரண்டிலும் ஜொலிக்கிறார், 54 வயது ஜெயச்சந்திரன். இவரிடம் 10 ஆயிரம் ஆண்டுகள் வரையுள்ள ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றை கூறினால், மறுநொடியே அன்று என்ன கிழமை என்பதை கணித்து கூறிவிடுகிறார். அதனால் இவரை மனித காலண்டர் என்று அழைக்கிறார்கள்.
ஜெயச்சந்திரன் தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் வசிக்கிறார். இவருடைய சொந்த ஊர் குரும்பூர் அருகே உள்ள மைக்கண் நாடார் குடியிருப்பு. இவரது பெற்றோர்: முத்துசாமி - ஜானகி அம்மாள்.
பள்ளிப் பருவத்திலே இவரிடம் கணித ஆற்றல் இருந்திருக்கிறது. அப்போதே புதிய கணித சூத்திரங்களையும் உருவாக்கியிருக்கிறார். படித்து முடித்து இவர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்றினார். அப்போது தனது கணித ஆற்றலை வங்கிச் சேவைக்காகவும் பயன்படுத்தினார். வங்கியின் வட்டி விகித கணக்கீடு தொடர்பாக புத்தகமும் எழுதியுள்ளார். இவர் கடந்த மாதம் சென்னையில் தனது கணக்கு மற்றும் நினைவாற்றலை நிரூபித்து சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
தன்னிடம் இருக்கும் விசேஷ திறமைகள் பற்றி அவர் கூறியதாவது:
எனக்கு சிறுவயது முதலே கணிதத்தில் ஆர்வம் உண்டு. மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், கணிதத்தில் முதலிடம் பிடித்துவிடுவேன். ஆசிரியர்களும் எனக்கு ஊக்கம் அளித்தனர். நான் தொடக்ககல்வியை வரண்டியவேல் இந்து நடுநிலைப்பள்ளியில் படித்தேன். பின்பு நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வியை பயின்றேன். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் எம்.காம். முடித்தேன். பின்பு வங்கியில் பணியாற்றினேன். அப்போது தவணை முறையில் கடன் வசூலிக்கும் திட்டத்துக்கு முதன் முதலாக சூத்திரத்தை உருவாக்கினேன். அது போன்று பல்வேறு கடன் திட்டங்களுக்கான சூத்திரங்களை வடிவமைத்தேன். அவை வங்கி நடைமுறையில் இருந்துகொண்டிருக்கின்றன.
கணிதத்தில் புதிய சாதனை படைக்கவேண்டும் என்பது என் ஆசை. இரவு நேரத்தில்தான் எனக்கு புதுவித கணக்கு சிந்தனைகள் தோன்றும். எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அமைதியாக படுத்தபடி சிந்தித்து புதிய கணித வழிமுறைகளை உருவாக்குவேன். எனது முயற்சி களுக்கு குடும்பத்தினரும் ஒத்துழைப்பு தந்தார்கள்.
பிறந்த தேதி, வருடத்தை சொன்னால் உடனடியாக அன்றைய கிழமையை சொல்லும் முறையை கணித்து கண்டுபிடித்தேன். இதற்காக பல்வேறு கணித யுக்திகளை பயன்படுத்தினேன். தொடக்கத்தில் இதில் சில கணக்கீட்டு சிக்கல் இருந்தன. தொடர்ந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டேன். அதன் பின்பு சாதனைக்குரிய இந்த முயற்சியில் வென்றிருக்கிறேன்.
தற்போது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கான கிழமைகளைகூட என்னால் உடனடியாக கூற முடியும். ஆனால் இணையதளத்தில் 10 ஆயிரம் ஆண்டுகள் வரை மட்டுமே காலண்டர் உள்ளது. இதனால் 10 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான ஆண்டு, மாதம், தேதியை கூறினால் கிழமையை உடனடியாக தெரிவிப்பேன்.
இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் பதிவிட விண்ணப்பித்தேன். எனது திறமையை நிரூபித்ததன் மூலமாக அந்த சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறேன். அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளேன்.
நான் வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதால், தற்போது பள்ளி அளவிலான கணிதத்தை மாணவ-மாணவிகள் எளிதில் கற்கும் வகையில் புதிய முறையை உருவாக்கி உள்ளேன். அதை பள்ளிகள் தோறும் சென்று கற்பித்து வருகிறேன். இதில் கின்னஸ் சாதனை படைக்கும் எண்ணமும் எனக்கு இருக்கிறது என்கிறார்.