அதிநவீன கம்ப்யூட்டரை பயன்படுத்தி கொரோனாவுக்கு மருந்து: அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்

அதிநவீன கம்ப்யூட்டரை பயன்படுத்தி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தி உள்ளனர்.
அதிநவீன கம்ப்யூட்டரை பயன்படுத்தி கொரோனாவுக்கு மருந்து: அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்
Published on

எட்டே மாதங்களில் உலகமெங்கும் 2 கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமானோரை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறது, கொரோனா வைரஸ் தொற்று.

அதை வீழ்த்துவதற்கு மருந்தோ, தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசியோ கண்டுபிடித்து இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சந்தைக்கு வரவில்லை. அதே நேரம், இதற்கான ஆராய்ச்சிகள் பல நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் சிகோகோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜூவான் டி பாப்லோ தலைமையிலான குழுவினர் அதிநவீன கம்ப்யூட்டரை பயன்படுத்தி, ஏராளமான சேர்மங்களை பகுப்பாய்வு செய்து, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு சேர்மம், கொரோனா தொற்றுக்கும் மருந்தாக பயன்படும் என்று கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் வெளியாகி இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சியில் பைபோலார் டிஸ்ஸார்டர் என்று அழைக்கப்படுகிற மன நோய், காது கேளாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தற்போது பயன்படுத்தப்படுகிற எப்செலன் மருந்து சேர்மம், கொரோனா வைரஸ் தொற்றுக்கும் தீர்வாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது கொரோனா வைரஸ் செல்கள் நகலெடுப்பை தடுத்து நிவாரணம் அளிக்கும் என தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரசின் மரபணு பொருளான ஆர்.என்.ஏ.யில் இருந்து புரதங்களை உருவாக்கும் வைரசின் திறனை எம்.பி.ஆர்.ஓ. புரதம் எளிதாக்குகிறது. மேலும் நோய்க்கிருமியை ஹோஸ்ட் செல்களுக்குள் நகல் எடுக்கவும் உதவுகிறது.

இந்த நிலையில் விஞ்ஞானிகள், உயிரியல் மூலக்கூறுகளை மாடலிங் செய்வதில் தங்களுடைய நிபுணத்துவத்தை பயன்படுத்தி, வைரசுக்கு எதிரான சாத்தியமான பயன்பாட்டுக்காக, ஏற்கனவே வேறு வகையில் பயன்பாட்டில் இருக்கிற ஆயிரக்கணக்கான சேர்மங்களை அதிநவீன கம்ப்யூட்டரில் விரைவாக திரையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில், கொரோனாவின் எம்.பி.ஆர்.ஓ. புரதத்தை வீழ்த்தும் ஆற்றில் மிக்க சேர்மம் எப்செலன் என்று அடையாளம் கண்டனர். இந்த எப்செலன், வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, செல் பாதுகாப்பு உள்ளிட்ட பல பண்புகளைக் கொண்ட ஒரு ரசாயன கலவை ஆகும்.

இந்த எப்செலன் சேர்மம்தான், தற்போது பைபோலார் டிஸ்ஸார்டர் என்று அழைக்கப்படுகிற மன நோய், காது கேளாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த சேர்மத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம், அது பாதுகாப்பானது என்பது ஏற்கனவே பல மருத்துவ பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் மறுபயன்பாட்டு மருந்தாக எப்செலனின் சாத்தியமான செயல்திறனை விளக்க இது உதவும் என்பது அவர்களின் கருத்து. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையை உருவாக்க இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்தை சோதிக்க இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

முடிவாக விஞ்ஞானி ஜூவான் டி பாப்லோ கூறுகையில், வைரஸ் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு புரதங்களையும், நாங்கள் முறையாக ஆராய்ந்து, அவற்றின் பாதிப்புகளையும், பரந்த அளவிலான மருந்துகளுக்கு அவற்றின் பதிலளிப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com