மன அழுத்தத்தை குறைக்கும் `தியான யோகா'

தியானம் மற்றும் யோகாசன ஆராய்ச்சியாளரான இவர், ஈரோடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். பல வருடங்களாக யோகாசனம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துபவர் தமிழ்வேல்சுவாமி.
மன அழுத்தத்தை குறைக்கும் `தியான யோகா'
Published on

''யோகாசனம், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. உடலை சிறப்பாக பராமரிக்கக்கூடியது. ஆனால், இன்று நாம் செய்து கொண்டிருக்கும் யோகாசனம் முழுமைப்பெறாமல், வெறும் உடலுக்கு மட்டுமே நன்மை செய்கிறது. ஆனால் யோகாசனத்திற்கு உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கும் சக்தி உண்டு. நம் முன்னோர்கள், அத்தகைய முயற்சியில்தான் யோகாசனங்களை பயின்று, உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக பராமரித்தார்கள்'' என்று முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், தமிழ்வேல்சுவாமி.

தியானம் மற்றும் யோகாசன ஆராய்ச்சியாளரான இவர், ஈரோடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். பல வருடங்களாக யோகாசனம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துபவர், யோகாசனத்துடன் தியானமும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கிறார்.

''நம் முன்னோர்கள், மிகவும் புத்திசாலிகள். உடலையும், மனதையும் கையாளத் தெரிந்தவர்கள். உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் செயல்களை மட்டுமே செய்திருக்கிறார்கள். மேலும் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகளையே அதிகம் உட்கொண்டிருக்கிறார்கள். இப்படி உடலுக்கும், மனதிற்கும் பக்குவமாக பார்த்து பார்த்து செயல்பட்டவர்கள், யோகாசனம் விஷயத்திலும் ரொம்பவும் கவனமாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவாக உருவானதுதான், தியான யோகாசனம்'' என்றவர், நம் முன்னோர்களின் தியான யோகாசனம் பற்றி விளக்குகிறார்.

''அந்தக் காலத்தில் யோகாசனம் என்பது உடலுக்கும், மனதிற்கும் சம்பந்தப்பட்டதாக திகழ்ந்திருக்கிறது. அதனால்தான் முந்தைய காலங்களில், யோகாசனங்கள் மட்டும் நிகழ்த்தப்படாமல், தியான யோகாசன பயிற்சிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

தியான யோகாசனம் என்பது, யோகாசனத்துடன் கூடிய தியான முயற்சி. அதாவது, உடலை வளைப்பதுடன், கூடவே மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்திருக்கிறார்கள். யோகாசனத்துடன் கூடிய தியான பயிற்சியின் மூலம் யோகாசனத்தின் முழுப் பயனையும் அடைய முடியும் என்பது, நம் முன்னோர்களின் கருத்து. அதில் உறுதியாக இருந்து, தியான யோகாசனங்கள் மூலமாக உடலுக்கும், மனதிற்கும் நன்மை செய்திருக்கிறார்கள். தியான யோகாசனம் மூலமாகவே, நம் முன்னோர்கள் 100 வயதை கடந்த பிறகும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்'' என்றவர், யோகாசன முயற்சிகளை தியான பயிற்சிகள் மூலமாக வலுப்படுத்து கிறார். நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு, நம் முன்னோர்களின் தியான யோகாசன முயற்சியை மீட்டெடுத்திருக்கிறார்.

''அது என்ன தியான யோகாசனம் என்கிறீர்களா...? ஒருமணி நேரம் யோகாசனம் செய்கிறீர்கள் என்றால், அதுமட்டுமே உங்களை புத்துணர்ச்சியாக்கி விடாது. ஒரு மணிநேர யோகாசன பயிற்சியுடன், கூடுதலாக அரை மணி நேர தியான பயிற்சியும் அவசியம். அப்போதுதான், நீங்கள் அரும்பாடுபட்டு செய்த யோகாசனத்திற்கு முழுமையான பயன் கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தியான பயிற்சியின் மூலம் மனமும் அமைதியாகும்.

இந்த தியான யோகா பயிற்சிகள், மன அழுத்தத்திற்கு பலன் தருவதாக, பல ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருக்கிறது. ஏனெனில் புத்துணர்ச்சி ரத்த செல்கள் வழியே பாய்ச்சப்பட்டு, உடல் உறுப்புகளையும், எண்ண ஓட்டங்களையும் சீர்படுத்துகிறது'' என்று பொறுப்பாக பேசும் தமிழ்வேல் சுவாமி, மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் அரசு ஊழியர்களுக்கு, தியான யோகா பயிற்சிகளை பல ஆண்டுகளாக கற்றுக்கொடுத்து வருகிறார். குறிப்பாக, 2020-ம் ஆண்டுகளில், கொரோனா ஊரடங்கு சமயங்களில், கடும் மன அழுத்தத்துடன் பணியாற்றிய ஈரோடு பகுதி காவலர்களுக்கு, தொடர் பயிற்சியாக தியான யோகாசனம் கற்றுக்கொடுத்து, அவர்களது மன அழுத்தத்திற்கும், மன சோர்விற்கும் மருந்து போட்டிருக்கிறார்.

''யோகாசனமும், தியானமும் நம் முன்னோர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதால் இதை பிரித்து பார்ப்பதில் எந்த பலனும் இல்லை. முன்னோர்களின் வாழ்க்கை முறையில் இருந்த தியான யோகா முறைகளையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஆராய்ந்து, அதை அறிவியல் ஆவணமாக்கும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன். அவை அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆகும்போது, தியான யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். யோகாசனம் மட்டும் செய்து கொண்டிருப்பவர்கள், தியானத்தின் மூலமும் நன்மைகளை பெறுவார்கள். யோகாசனமும், அதன் பாரம்பரிய வடிவம் பெற்றுவிடும்'' என்பவர், மன அழுத்தம் அதிகமாக இருக்கும் அரசுப்பணியாளர்களுக்கு, தியான யோகாவை கற்றுக்கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அதுமட்டுமன்றி, கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளிக்குழந்தைகள், குடும்ப பெண்களுக்கும் தியான யோகாசனம் பற்றிய விழிப்புணர்வுகளை உண்டாக்கி, அதை பல வழிகளில் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார்.

தியான யோகா பயிற்சிகள், மன அழுத்தத்திற்கு பலன் தருவதாக, பல ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருக்கிறது. ஏனெனில் புத்துணர்ச்சி ரத்த செல்கள் வழியே பாய்ச்சப்பட்டு, உடல் உறுப்புகளையும், எண்ண ஓட்டங்களையும் சீர்ப்படுத்துகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com