

இவர் டெல்லியை சேர்ந்தவர். நடுத்தர வயதை சேர்ந்த இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், ஐயாஷ். திருநங்கையாக மாறிய பிறகு தனது பெயரை நாஸ் என மாற்றிக்கொண்டிருக்கிறார்.
நாஸ் ஏழு வயதிலேயே குடும்பத்தினரை பிரிந்து மும்பையில் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார். குழந்தைப் பருவமும், பள்ளி படிப்பும் அவருக்கு கடும் போராட்ட களமாக அமைந்திருக்கிறது. பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்காக வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். பள்ளி முடிந்ததும் மாலையில் உணவகத்துக்கு சென்று வேலை பார்த்திருக்கிறார். அவரது அத்தை காலையில் வீட்டு வேலைகளை செய்ய வைத்தும் கஷ்டப்படுத்தி இருக்கிறார். அதோடு ஜோஷியின் துயரம் நிற்கவில்லை.
11 வயதில் நெருங்கிய உறவினர் மற்றும் அவருடைய நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அது மரண படுக்கையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. அப்போது அவருடைய மாமாவும் ஆதரவுக்கரம் நீட்டவில்லை. பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்கும்படி கூறி இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்தில் திருநங்கை ஒருவரை சந்தித்திருக்கிறார். தான் அனுபவித்து வரும் வேதனைகளை அந்த திருநங்கையிடம் கூறிய நாஸ் தனக்கு ஒரு வேலை தேடி தருமாறு கேட்டிருக்கிறார்.
பின்னர் அந்த திருநங்கையின் உதவியோடு பார் ஒன்றில் நடனமாடும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு வேலை பார்த்துக்கொண்டே படிப்பையும் தொடர்ந்து இருக்கிறார். 7 ஆண்டுகள் பாரில் பணிபுரிந்து பள்ளி படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார். அப்போது மாடலிங் துறையில் இருக்கும் உறவினர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்லாலஜி நிறுவனத்தில் மேல்படிப்பை தொடர உதவி செய்திருக்கிறார்.
என் இளமை பருவம் கனவு போலவே கழிந்தது. எல்லோரும் என்னிடம் பாகுபாடு காட்டினார்கள். அவதூறாக பேசினார்கள். உடல் ரீதியாலும், இழிவான பேச்சுக்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் என்கிறார்.
நாஸ் படிப்பை முடித்த பிறகு நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறார். 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் மீண்டும் வேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையை நகர்த்த பாலியல் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
2013-ம் ஆண்டு பாலியல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாடலிங் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.
நீங்கள் தனிமையில் வாழும்போது நோய்வாய்ப்பட்டாலோ, மன ரீதியாக பாதிப்புக்குள்ளானாலோ சோர்ந்துவிடாதீர்கள். அந்த காலகட்டம்தான் உங்களை யாரென்று உணரவைத்து வலிமையானவர்களாக மாற்றும். அறுவை சிகிச்சையோ, ஹார்மோன்கள் மாற்றங்களோ நான் வாழ்க்கையில் அனுபவித்த வலிகளுக்கு முன்னால் சாதாரணமானது என்கிறார்.
நாஸ் நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பாலின விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தொடர்ச்சியாக மூன்று முறை மிஸ் வேர்ல்டு டைவர்சிட்டி பட்டம் வென்றது பெருமிதம் அளிப்பதாக கூறுகிறார்.
இந்த விருதை எங்கள் திருநங்கைகள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களது முன்னேற்றத்திற்காக பணியாற்ற விரும்புகிறேன். அடுத்த ஆண்டு பெல்ஜியத்தில் நடக்கும் சர்வதேச திருநங்கைகள் அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறேன். அழகிப்போட்டி வெற்றிகள் மூலம் புதிய எல்லைகளை தொடப்போகிறேன் என்கிற நாஸ், 10 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தாய்மை உணர்வு தனக்கு புது உத்வேகத்தை கொடுத்திருப்பதாக சொல்கிறார்.
தாய்மை என்பது உணர்வுபூர்வமானது. எங்களை போன்றவர்களுக்கு அது மாயாஜால சக்தி போன்றது. தனிமை வாழ்க்கை என்னை தடுமாற வைத்தது. இன்று நான் எனக்காக மட்டும் வாழவில்லை. என் குழந்தைக்காகவும் வாழ்கிறேன். அவள் முகத்தில் புன்னகையை கொண்டுவர எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். அவளை ஒரு வலிமைமிக்க பெண்ணாக உருவாக்க வேண்டும். நான் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை அவளுக்கு எடுத்துக்கூறி அவளை செம்மைப்படுத்துவேன். அவளை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வைப்பேன். அவளை ஒருபோதும் யாரையும் சார்ந்திருக்க விடமாட்டேன் என்கிறார்.