

இந்த சேவையை தொடங்கியவர், மும்பை சித்தரஞ்சன் பூங்கா பகுதியை சேர்ந்த லட்சுமி. அதுபற்றி அவரே பகிர்ந்து கொள்கிறார்.
2020-ம் ஆண்டு கொரோனா அலை நாடு முழுவதும் வீசத் தொடங்கியது. அந்த அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் முக கவசங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பார்த்தனர். 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பையின் சித்தரஞ்சன் பூங்கா அருகே முக கவசங் களின் விலை உச்சத்தை எட்டியது.
ஒரு ஜோடி முக கவசம் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களால் முக கவசம் அணிந்து தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியவில்லை. முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது என்றவர், இதை அறிந்த கொண்டு தம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்ய நினைத்தார். அப்படி உருவானதுதான் முக கவச பெட்டி. அதில் வைக்கப்பட்டிருக்கும் முக கவசங்களை இலவசமாக யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம்.
ஆரம்பத்தில் முக கவசங்களை விலைக்கு வாங்கி, ஏழைகளுக்குக் கொடுத்து உதவி செய்ய விரும்பினேன். ஆனால், முக கவசத்தின் விலை அதிகமாக இருந்ததால் அந்த முடிவை கைவிட்டேன். ஏற்கனவே எம்பராய்டிங் துறையில் முன் அனுபவம் இருந்ததால் நானே முக கவசத்தைத் தயாரிக்க முடிவெடுத்தேன். என்னுடைய முடிவிற்கு மகனும் துணையாக இருந்தான்.
முதல் கட்டமாக குறைந்த அளவில் முக கவசம் தயாரித்து இலவசமாக வழங்கினோம். பின்பு தினமும் 200 முக கவசங்கள் வரை தயாரித்தோம். அவற்றை என் மகன் சவுரவ் தாஸ் நகரின் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களுக்கு இலவசமாக வழங்கினான்.
இந்த முயற்சியின் மூலம் குறுகிய காலத்திலேயே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட முக கவசங்கள் ஏழை எளியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதற்கிடையே, ஐந்து வெவ்வேறு இடங்களில் என்னுடைய மகன் அட்டைப் பெட்டிகள் நிறுவினான். அதில் முக கவசங்கள் நிரப்பப்பட்டன.
அதிலிருந்து தேவைப்படும் நபர்கள் முக கவசங்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தனர் என்றவர், கொரோனா என்ற வார்த்தை இவ்வுலகை விட்டு முற்றிலும் மறையும் வரை இந்த சேவையை தொடர ஆவலாய் இருப்பதாகவும் கூறுகிறார்.
சேவை உள்ளம் கொண்ட இந்த அம்மா-மகன், ஏற்கனவே குளிர்காலத்தில் சாலையோர விலங்குகளுக்கு, இலவச ஸ்வெட்டர் தைத்து கொடுத்து பாராட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.