

கேப் கேனவரெல்,
நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25ந்தேதி அன்று மாலை 5.50 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.
நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.
இந்த தொலைநோக்கியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தது. பூமியிலிருக்கும் கட்டுபாட்டு அறையில் இருந்து கொண்டே அதிலிருந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. அதன் பின், இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உள்ள டென்னிஸ் கோர்ட் அளவிலான சூரிய கவசம்(சன்ஷீல்ட்) முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஏரியன் ராக்கெட்டில் பொருத்துவதற்கு ஏதுவாக, தொலைநோக்கியின் சூரியக் கவசமும் முதன்மைக் கண்ணாடியும் மடிக்கப்பட வேண்டியிருந்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மடித்து வைக்கப்பட்ட நிலையில், மிக நெருக்கமாக 10.7 மீட்டர் நீளத்துக்கு 4.5 மீட்டர் அகலம் மற்றும் 4.5 மீட்டர் உயர பெட்டியில் பத்திரமாக அடைக்கப்பட்டது. தற்போது தன்னைத் தானே முழுமையாக விரித்துக் கொள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு வழிகாட்டப்படுகிறது.