இயற்கை தினமும் வானில் வரையும் வண்ணக்கவிதை.. அதுவே ஹவாயின் வானவில் அதிசயம்..

வானவில் என்பது வெறும் அழகான காட்சி மட்டுமல்ல, அதன் பின்னால் அறிவியல் ரகசியமும் உள்ளது.
வானவில்
Published on

மழைக்கு பிறகு வானில் தோன்றும் வானவில், இயற்கையின் அழகிய படைப்புகளில் ஒன்றாகும். சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும், அதன் வண்ணங்கள் மனிதர்களின் மனதில் நீங்காத மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால் உலகின் பல பகுதிகளில் அரிதாக மட்டுமே காட்சியளிக்கும் வானவில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அடிக்கடி தோன்றி இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இதன் காரணமாகவே ஹவாய், “உலகின் வானவில் தலைநகரம்” என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது.

வானவில்களை வரவேற்கும் இயற்கை அமைப்பு

ஹவாயின் தனித்துவமான புவியியல் அமைப்புதான் அங்கு அதிக அளவில் வானவில்கள் தோன்றுவதற்கான முக்கிய காரணமாகும். உயரமான மலைகள், கடல் காற்று, தூய்மையான வளிமண்டலம் மற்றும் அடிக்கடி பெய்யும் மழைச்சாரல் ஆகியவை இணைந்து வானவில் உருவாகும் சூழலை உருவாக்குகின்றன.

மவுனாலோவா, ஹலேகலா மற்றும் வையலேலே போன்ற மலைப்பகுதிகள் மேகங்களின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் காற்றுடன் கலந்து உருவாகும் மேகங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மழையை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் அருகிலுள்ள பகுதிகளில் சூரிய ஒளி பிரகாசமாக இருக்கும்.

இந்த மழைத்துளிகளும் சூரிய ஒளியும் சந்திக்கும் தருணத்தில்தான் வானில் வண்ண வளைவு உருவாகிறது.

சூரிய ஒளியின் அறிவியல் மாயம்

வானவில் என்பது வெறும் அழகான காட்சி மட்டுமல்ல; அதன் பின்னால் அறிவியல் ரகசியமும் உள்ளது. சூரிய ஒளி மழைத்துளிகளுக்குள் செல்லும்போது, ஒளி விலகல் மற்றும் பிரதிபலிப்பு ஏற்படுகிறது. இதனால் வெள்ளை நிற ஒளி ஏழு நிறங்களாகப் பிரிந்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என வானில் வண்ணக் கோலத்தை உருவாக்குகிறது.

ஹவாயில் மழைச்சாரல் மற்றும் சூரிய ஒளி ஒரே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அங்கு வானவில்களும் அதிகமாக தோன்றுகின்றன.

காலநிலையின் தனிச்சிறப்பு

ஹவாயின் உள்ளூர் காலநிலை மாற்றங்களும் வானவில் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன. ஹவாய் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவன் புசிங்கர் கூறுகையில், இரவு நேரங்களில் கடலின் வெப்பம் வளிமண்டலத்தை சூடாக்குகிறது. அதே நேரத்தில் மேகங்கள் குளிர்ச்சியடைவதால் அதிகாலை நேரங்களில் மழைப்பொழிவும், வானவில் தோன்றும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

நவம்பர் முதல் மார்ச் வரை ஹவாயில் மழைக்காலம் நிலவினாலும், அங்கு வெப்பமண்டல காலநிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. ஒரு பகுதியில் மழை பெய்யும் போது, அதற்கு அருகிலுள்ள பகுதியில் சூரிய ஒளி காணப்படுவது அங்கு இயல்பான நிகழ்வாகும். இந்த மாறுபட்ட வானிலை சூழலே ஹவாயின் வானவில் அதிசயத்திற்கு காரணமாக உள்ளது.

மக்களின் கலாசாரத்தில் இடம் பிடித்த வானவில்

ஹவாய் மக்களின் கலாசாரம் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளிலும் வானவில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

வானவில்லை குறிக்க ஹவாய் மொழியில் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூமியை ஒட்டி தோன்றும் வானவிலுக்கு “உவாக்கோகோ”, நிற்கும் ஒளிக்கற்றைகள் போன்ற வானவிலுக்கு “காஹிலி”, கண்ணுக்குத் தெரியாத வானவிலுக்கு “புனகேயா”, சந்திர ஒளியில் தோன்றும் வானவிலுக்கு “ஆனுவேனு கவு போ” போன்ற பெயர்கள் உள்ளன.

இவை, வானவிலை ஹவாய் மக்கள் ஒரு இயற்கை நிகழ்வாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் மதிப்பதை வெளிப்படுத்துகின்றன.

இயற்கை வரைந்த வண்ண ஓவியம்

மலைகள், கடல், மழை, சூரிய ஒளி என இயற்கையின் பல கூறுகள் ஒன்றிணைந்து ஹவாயில் தினமும் வானில் வண்ண ஓவியங்களை உருவாக்குகின்றன. வானவில் என்பது அங்கு வெறும் சில நிமிடக் காட்சியல்ல; அது இயற்கை, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் அழகிய சங்கமமாக திகழ்கிறது.

அதனால்தான் உலகம் முழுவதும் இருந்து வரும் பயணிகள் ஹவாயின் இயற்கை அழகை ரசிப்பதோடு, வானில் தோன்றும் அந்த அற்புதமான வண்ணக் காட்சியையும் காண ஆவலுடன் வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com