ரெயில் பயணங்களில் கவனம் தேவை...!

இருப்புப்பாதை என்பது வெறும் இரும்புப் பாதையல்ல இந்தியாவையே எண்ணற்ற சக்கரங்களில் இயக்கிச் செல்லும் ஒரு வளர்ச்சிப்பாதை. இந்தப் பாதையின் பாதுகாப்பு என்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சி.
ரெயில் பயணங்களில் கவனம் தேவை...!
Published on

ஆர்.பி.எப். என்கிற ரெயில்வே பாதுகாப்புப் படை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறை மாநில அரசுகளின் பொறுப்பு என்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வேயில் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பகுதி செலவுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டவை தான் இருப்புப்பாதை காவல் நிலையங்கள். ஆர்.பி.எப் ரெயில்வே துறையின் சொத்துகளைப் பாதுகாப்பதும், இருப்புப்பாதை காவல் நிலையங்கள் ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் என பணிப்பிரிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்புப்பாதை காவல்துறை எண்ணற்ற முயற்சிகள் எடுத்தாலும் தண்டவாளத்தில் நடக்கும் தற்கொலைகளையும், ரெயில் விபத்துகளையும், ஒரு சில குற்றங்களையும் முழுவதுமாக தடுக்கமுடியவில்லை. கடந்த வருடம் அமிர்தசரசில் தண்டவாளத்தில் நடந்த பெரிய விபத்தாக இருந்தாலும் சரி, தனித்தனியாக நடக்கும் விபத்துகளாக இருந்தாலும் சரி, இதற்கு மக்களின் கவனக் குறைவும், சட்டங்களை மதிக்காதத்தன்மையுமே முழுக்க முழுக்கக் காரணம். சமீபகாலங்களில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்கும் போது ரெயில் மோதி இறப்பது மிகப்பெரிய சவாலாக இன்று உருவெடுத்துள்ளது. இது தவிர படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டே பயணம் செய்யும் போது தூங்கி விழுவது, ரெயில் நிலையங்களில் காற்றுக்காக வருபவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தைக் கவனமில்லாமல் கடக்கும் போது ரெயில் மோதி இறப்பது, படியில் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து வெளியிலிருந்துக் குற்றவாளிகள் செல் போன்களைப் பிடுங்க முயற்சிக்கும் போது விழுவது எனப் பல்வேறு வகைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. கோடைகாலங்களில் காற்று வாங்குவதற்காக படி அருகில் நின்று பயணம் செய்பவர்கள் தற்கொலையைத் தானே தேடி செல்பவர்கள் என்றால் மிகையல்ல. சமீபத்தில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த சார்மினார் எக்ஸ்பிரசில் வந்த நபர் படியில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்ததில் இடுப்புக்கு கீழ் உள்ள அத்தனை உறுப்புகளும் நசுக்கப்பட்டு கால்களை நிரந்தரமாக இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இது போன்ற சம்பவங்களால் தனிப்பட்ட குடும்பங்களில் குடும்பத் தலைவர்கள் முதல் வீட்டின் பொருளாதாரத்தை கட்டிக் காப்பவர்களும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சமுதாய தாக்கமும் அளவிட முடியாதது. தமிழ் நாட்டில் மட்டும் ரெயில், ரெயில்வே நிலையங்களில் மற்றும் தண்டவாளாங்களில் பல்வேறு காரணங்களால் விபத்துக்குள்ளானவர்கள் 2016-ல் மட்டும் 1,630 ஆண்கள் மற்றும் 282 பெண்கள், 2017-ல் 1,807 ஆண்கள் மற்றும் 313 பெண்கள், 2018-ல் 1,745 ஆண்கள் மற்றும் 299 பெண்கள் சராசரியாக ஆண்களும், பெண்களுமாக சேர்த்து 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் ரெயில் பயணத்தின் போதும், தண்டவாளங்களை கடக்கும் போதும் பாதுகாப்பான பயணத்திற்கு பயணிகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் ரெயிலை பயன்படுத்தக்கூடிய சூழலில் பயணிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் அதனுடைய முழுமையான பலன் கிடைக்கப்போவதில்லை. ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆளில்லா ரெயில் கிராசிங் கடப்பது, தண்டவாளங்களை கடப்பது, ரெயிலில் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. 2018-ல் மட்டும் 220 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

சில நேரங்களில் பயணிகளை குறிவைத்து இரவு நேரம் குறிப்பாக 1 முதல் 4 மணிக்குள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திருட்டுச் செயலில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ஒரு முக்கிய பிரமுகர் பயணம் செய்த முதல் வகுப்பு அறையில் நடந்த திருட்டில் விசாரணையின் போது அந்த அறையை உள்பக்கம் தாளிடுவதில் சிரமம் இருந்ததால் பூட்ட இயலவில்லை என்பது தெரிய வந்தது. அதுபோல பிரச்சினைகள் இருந்தால் பயணச்சீட்டு பரிசோதகர் கோச் உதவியாளர் அல்லது ஆர்.பி.எப் இருப்புப்பாதை காவலர்களிடம் சொல்வது முக்கியமாகும்.

அனைத்து ரெயில் நிலையங்களிலும் இருப்புப்பாதைகளிலும் உயர்ரகக் கண்காணிப்பு கேமராக்களுடன் வீடியோ அனலடிக் மென்பொருள் சேர்த்து குற்றங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் நடைமேடை மற்றும் தண்டவாளத்திற்கு இடையே, தண்டவாளத்திற்கு இணையாக நடைமேடையில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கோடுகள் குறித்து அதனைத் தாண்டிச் செல்லாதவாறுப் பார்ப்பதும், ரெயில் வரக்கூடிய அந்த நடைமேடைகளில் நடந்து கொண்டே பாதுகாப்புத் தொடர்பான அறிவிப்பு செய்வதும் அவசியமாகிறது. ரெயில் விபத்துக்களில் ஏற்படும் இறப்பை பெருமளவில் தடுப்பதற்கு எதிர்காலத்தில் ரெயில் பாதுகாப்பு என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். பயணிப்போர் தங்களுடையப் பாதுகாப்பு மட்டுமல்லாமல் சகப்பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும், ஒவ்வொரு ரெயிலிலும் பொறுப்புள்ள குடிமக்கள் தன்னார்வ தொண்டர்களாக சேர்ந்து பயணிகள் பாதுகாப்பில் இருப்புப்பாதைக் காவல் துறைக்கும் ஆர்.பி.எப்க்கும் மக்கள் உதவ வேண்டும். எந்தத் தகவலாக இருந்தாலும் டெலிபோன் எண்.1512ல் தொடர்பு கொண்டு பேசலாம். ரெயில் பயணம் என்பது எல்லோருக்கும் இனிதான பயணமாக அமைய வேண்டும் என்பதே இருப்புப்பாதை காவல்துறையின் நோக்கம். அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் ஏனெனில் எந்த விபத்தும் எதிர்பாராமல் நடப்பதல்ல; கவனக்குறைவால் நடப்பதே ஆகும்.

- வி.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ், ரெயில்வே டி.ஐ.ஜி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com