

புதுடெல்லி,
இந்திய ரெயில்கள் வேகமாகவும் இல்லை, சரியான நேரத்திலும் இல்லை என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) நடத்திய தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், ரெயில்வே துறையை மேம்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கையில், பயணிகள் ரெயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 50 கிமீ வேகத்தில் இருந்து 75 கிமீ ஆக உயர்த்த ரயில்வே திட்டமிட்டது. ஆனாலும், 2019-20ல் அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 50.6 கி.மீ. ஆகவே இருந்தது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம், பயணிகள் ரயில்களின் வேகம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளது என்று சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரெயில்வேயில் நிலவும் சரிவு குறித்து அரசிடம் சிஏஜி பதில் கோரியது.அதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, பயணிகள் சேவைகளின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தாமலேயே, ஓர் ஆண்டுக்கு சராசரியாக 200 ரயில்களை இந்திய ரயில்வேஅறிமுகப்படுத்துகிறது. தற்போதுள்ள ரயில் உள்கட்டமைப்பில், பயணிகள் ரயில்களின் அழுத்தம் அதிகரிப்பதே மெதுவான வேகத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
ரெயில்களின் வேகம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமல் விட்டால், அது ரெயில்வேயை நிதிப் பிரச்சனைகளில் சிக்க வைக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ரெயில்களின் வேகம்
சிஏஜி இன் மதிப்பீடு, 2019-20 நிதியாண்டில் இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் முழு அளவில் இயக்கப்பட்ட ரெயில்களின் அளவை வைத்து அறிக்கை தாயரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நாட்டில் இயங்கும் 2,951 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சராசரி வேகத்தை சிஏஜி கணக்கிட்டுள்ளது. அவற்றுள் 62 ரயில்கள் (2.1 சதவீதம்), சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 75 கிமீ வேகத்தை விட அதிகமாக பயணிக்கின்றன. 933 ரயில்கள் (31 சதவீதம்), சராசரியாக மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் இயப்படுகின்றன.
பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (37 சதவீதம்), சராசரியாக மணிக்கு 55-75 கிமீ வேகத்தில் செல்கின்றன.சுமார் 269 எக்ஸ்பிரஸ் ரயில்கள் (9.4 சதவீதம்), சராசரியாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் இயப்படுகின்றன.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது மற்ற பயணிகள் ரயில்களின் வேகத்தைக் குறைத்ததனால் வந்தது.
ரெயில்களின் வேகத்தில் வித்தியாசமில்லை
2012-13ல், ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக 1,000 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 19 மணி 52 நிமிடங்கள் எடுக்கும். அதுவே 2019-20ல், 19 மணி 47 நிமிடங்களாக குறைந்துள்ளது.ஏறத்தாழ 7 வருடங்களாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தில் பெரிய வித்தியாசமில்லை.
2012-13ல், பயணிகள் ரயில்கள் 1,000 கி.மீ.களை கடக்க 27 மணி 37 நிமிடங்கள் ஆகும். 2019-20 ஆம் ஆண்டில், இந்த ரயில்கள் அதே தூரத்தை கடக்க 29 மணி 51 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. இதன்மூலம், பயணிகள் ரயில்களின் வேகம் வெகுவாக குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறைந்த தூரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள், 2012-13ல், 50 கி.மீ தூரத்தை கடக்க 1 மணி நேரம் 13 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் 2019-20 இல், அந்த ரெயில்கள் அதைவிட கூடுதலாக 6 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக் கொள்கின்றன.
குறிப்பிட்ட ரெயில் தடங்களில், ரெயில்களை குறிப்பிட்ட வேகத்துக்கு மிகாமல் இயக்கிட அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் (எம்பிஎஸ்) உள்ளது. ஆனால் நீண்ட காலமாக, எம்பிஎஸ் வரம்பு அதிகரிக்கப்படாமல் உள்ளது.
தாமதமாக சென்றடையும் ரெயில்கள்
ஒரு ரெயில் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்குள், போய் சேர வேண்டிய நிலையத்தை அடைந்தால், அது சரியான நேரத்தில் சென்றதாக கருதப்படுகிறது.
சிஏஜி அறிக்கையின் படி, சராசரியாக, 69.23 சதவீத ரயில்கள் மட்டுமே சரியான நேரத்தில் இலக்கை அடைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போக்கு கீழ்நோக்கி நகர்கிறது. அதாவது இன்னும் பல ரெயில்கள் தாமதாகவே சென்று சேருகின்றன.
தாமதமாகும் திட்டங்கள்
2008-09 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே உள்கட்டமைப்பில், ரூ. 2.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், திட்டங்களில் மெதுவாக செயல்படுத்தப்படுவதால் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான தொகையில், 57 சதவீதம் புதிய ரெயில் பாதைகள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள பாதைகளை இரட்டிப்பாக்கவும் செலவிடப்பட்டது.
சராசரியாக, ஒரு ரெயில் திட்டம் முடிக்க சுமார் 5.3 ஆண்டுகள் ஆகும். ஆனால், ரெயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் திட்டம் சுமார் 7.5 ஆண்டுகளில் முடிவடையும் என்று சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் தாமதமாவதற்கு காரணம், பிளாக் போதுமான அளவில் வழங்கப்படாதது, ஒருங்கிணைந்த பிளாக் இல்லாதது, அதிக லைன் கொள்ளளவு பயன்பாடு, டிராக் மிஷின்கள் பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்சினை மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை ஆகும் என்று சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.