

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவ பிரிவுக்கு தலைமை தாங்கினார்.இவர்கள்
மரபுசாரா கொரில்லா போர்முறை தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். இதற்காக மண்டேலாவிற்கு 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறி கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையில் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய
தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
நெல்சன் மண்டேலா 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும், 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச்சண்டை வீரராகவே அறிய பட்டார்.அந்த குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள நெல்சன் இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவை பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ம் ஆண்டு ஜோகானஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
அப்போது நோமதாம் சங்கர் என்ற செவிலியரை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. 5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும், 2-வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.
மண்டேலா 1962-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.
1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசு தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.
1994-ம் ஆண்டு மே 10-ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்று கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கருப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி தனது 95-வது வயதில் இவர் காலமானார்.