நிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்... நாசா விண்கலத்தின் அரிய கண்டுபிடிப்புகள்

அமெரிக்க விண்வெளி வீரர்களுக்காக நிலவில் கட்டிடம் ஒன்றை கட்டியெழுப்ப நாசா தயாராகி வரும் சூழலில், இதனை தகவல் களஞ்சியங்களில் ஒன்றாக நாசா பார்க்கிறது.

நிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்... நாசா விண்கலத்தின் அரிய கண்டுபிடிப்புகள்
Published on

கேப் கேனவரெல்

நிலவில் புதிய பெரிய பள்ளம் மற்றும் பல்வேறு ஆச்சரியம் நிறைந்த தகவல்களை நாசா விண்கலம் கண்டறிந்துள்ளது.

பூமியின் துணைக்கோளாக அதனுடன் சேர்ந்து சுற்றி வரும் நிலவில் பல்வேறு ஆச்சரியங்களும் அதிசயங்களும் காணப்படுகின்றன. கவிஞர்களால் பாடப்பட்டும், பெண்களுடன் ஒப்பிட்டு வர்ணிக்கப்பட்டும் வரும் இந்த நிலவில் பல்வேறு உலக நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

நிலவில் ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு கழகம், விண்கலம் ஒன்றை அனுப்பியது. எல்.ஆர்.ஓ. எனப்படும் அந்த விண்கலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு புகைப்படங்களை அனுப்பி உள்ளது.

நிலவில் மோதல்

இதில், 2024-ம் ஆண்டு மே மாதம் அனுப்பிய புகைப்படம் அப்போது ஆய்வாளர்களால் சரிவர ஆய்வு செய்யப்படவில்லை. குவிந்திருந்த புகைப்படங்களால், 2025-ம் ஆண்டு ஆகஸ்டு வரை அதில் பெரிய அளவில் கவனம் செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில், நிலவில் 2024-ம் ஆண்டில் வால் நட்சத்திரம் அல்லது குறுங்கோள் ஒன்று மோதி தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இதனை பூமியில் உள்ள மற்றும் விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகள் கூட கண்டறியவில்லை. அவற்றால் பதிவு செய்ய முடியாத அளவுக்கு இந்த நிகழ்வு தப்பியுள்ளது.

132 ஆண்டுகள்

ஆனால், இந்த எல்.ஆர்.ஓ. எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் நிலவில் ஏற்பட்ட மோதலால் உண்டான புதிய பெரிய பள்ளம் ஒன்று பதிவாகினது தெரிய வந்துள்ளது. அது ரோமன் கொலோசியம் எனப்படும் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றை விட அளவில் பெரியது. இந்த ஆழ்ந்த பள்ளம் 728 அடி அளவில் பரந்து விரிந்தும், 141 அடி ஆழமும் கொண்டுள்ளது.

சமீப காலங்களில் சூரிய குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிக பெரிய பள்ளம் இது என அறியப்படுகிறது. 132 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இதுபோன்ற பெரிய நிகழ்வுகள் ஏற்படும். இந்த நிகழ்வானது அரிய, வாழ்வில் ஒரு முறையே கவனிக்கப்பட கூடிய ஒன்றாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3 மடங்கு பெரியது

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த எல்.ஆர்.ஓ. கண்டறிந்த சாதனை அளவிலான பெரிய பள்ளம் போன்று இந்த புதிய பள்ளம் 3 மடங்கு பெரியது. இதற்கு, ஹூஸ்டன் நிலவு மற்றும் கோள் மையத்தின் முன்னாள் இயக்குநரான, மறைந்த தாமஸ் மெக்கெட்சின் என்பவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த மோதலால், நிலவில் தூசு மற்றும் பாறை துகள்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் தூக்கி எறியப்பட்டு உள்ளது. அது 100 கி.மீ. தொலைவிற்கு பரவி காணப்படுகிறது. இந்த புதிய பள்ளத்திற்கு சுற்றிலும் 7 கி.மீ. அகலத்தில் குளிர் பகுதி பரவியுள்ளதும் வேறோர் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டு உள்ளது.

80 ஆயிரம் ஆண்டுகள்

2009-ம் ஆண்டு ஏவப்பட்ட இந்த எல்.ஆர்.ஓ. மற்றுமொரு புதிய கண்டுபிடிப்பையும் தெரியப்படுத்தி உள்ளது. அது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. இதன்படி, இதற்கு முன்பு அறிந்திருந்த நிகழ்வுக்கு மாற்றாக, நிலவின் மேற்பகுதியிலுள்ள மண்ணானது, 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ உள்புற விசையால் ஏறக்குறைய ஓர் அங்குலம் அளவுக்கு புரட்டிப்போடப்படுகிறது என்றும் கண்டறிந்து உள்ளது.

இதனை எல்.ஆர்.ஓ. கேமராக்களை ஆய்வு செய்து வரும் தலைமை விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்து உள்ளார். இதனால், அப்பல்லோ வீரர்கள் நிலவில் பதித்த தங்களுடைய கால் தடம் காலத்திற்கும் அழியாமல் இருக்கும் என்ற நம்பிக்கைக்கு முரணான தகவல் உறுதியாகி உள்ளது என்று ராபின்சன் கூறுகிறார்.

நிலவில் கட்டிடம்

தொடர்ந்து அவர், நிலவின் உள்புறத்தில் இருந்து விசையை தூண்டும் பொருளின் தாக்கம் மற்றும் அதன் ஆபத்து பற்றி இனி கணக்கிட வேண்டும். ஏனெனில், நிலவில் கட்டிடம் அமைக்கும் நாசாவின் திட்டத்திற்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? என்றும் அதனை தவிர்க்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை போன்றவை பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

அந்த பொருளின் தாக்கம் ஏற்படுத்த கூடிய பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல் அல்லது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவுக்கு நன்றாக, திடம் வாய்ந்த கட்டமைப்புகளை என்ஜினீயர்கள் உருவாக்க இந்த ஆய்வு உதவி செய்யும் என்றும் அவர் கூறினார்.

அதனால், அமெரிக்க விண்வெளி வீரர்களுக்காக நிலவில் கட்டிடம் ஒன்றை கட்டியெழுப்ப நாசா தயாராகி வரும் சூழலில், இதனை தகவல் களஞ்சியங்களில் ஒன்றாக நாசா பார்க்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com