

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய நாடான லிச்சென்ஸ்டைன், சொந்தமாக விமான நிலையம், நாணயம் மற்றும் ராணுவம் இல்லாமலேயே உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் ரைன் நதிக்கரையில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடு லிச்சென்ஸ்டைன் (Liechtenstein). வெறும் 62 சதுர மைல் பரப்பளவை மட்டுமே கொண்ட இந்த நாட்டின் மேற்கு பகுதியில் சுவிட்சர்லாந்தும், கிழக்கு பகுதியில் ஆஸ்திரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான புல்வெளிகள், கண்ணை கவரும் திராட்சை தோட்டங்கள் என ரம்மியமான சூழலை கொண்டுள்ளது இதன் தலைநகரான வடூஸ்.
நவீன உலகில் ஒரு நாட்டுக்கு மிக முக்கிய அடையாளமாக கருதப்படும் சர்வதேச விமான நிலையம் லிச்சென்ஸ்டைனில் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டுக்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள், முதலில் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ரெயில் அல்லது சாலை வழியாக மட்டுமே லிச்சென்ஸ்டைனுக்குச் செல்ல முடியும்.
விமான நிலையம் மட்டுமின்றி, இந்த நாட்டுக்கென சொந்தமாக பணம் அச்சிடும் உரிமையோ, தனி நாணயமோ கிடையாது. சுவிட்சர்லாந்துடன் செய்துகொண்டுள்ள நாணய மற்றும் சுங்க ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நாட்டின் பணமான 'ஸ்விஸ் பிராங்க்' இங்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நாட்டைப் பாதுகாக்கப் பிரத்யேக ராணுவப் படையும் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையம், ராணுவம், தனி நாணயம் என எதுவுமே இல்லாவிட்டாலும், பொருளாதாரத்தில் இந்த நாடு உச்சத்தில் உள்ளது. உலகின் அதிக தனிநபர் வருமானம் கொண்ட பணக்கார நாடுகளின் பட்டியலில் லிச்சென்ஸ்டைனுக்கு முக்கிய இடம் உண்டு.
குறைந்த வரி விதிப்பு மற்றும் எளிமையான தொழில் கொள்கைகள் காரணமாக, உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இங்கு கிளைகளை தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, இந்த நாட்டில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கையைவிட, இங்கு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் என்ற ஆச்சரிய தகவலும் உள்ளது.