இரவில் பறந்து திரியும் விலங்கு

இரவே...இரவே விடியாதே...இன்பத்தின் கதையை முடிக்காதே என்று இரவு நேரத்தில் இனிய வாழ்க்கை வாழும் இனமாக வவ்வால்கள் விளங்குகின்றன.
இரவில் பறந்து திரியும் விலங்கு
Published on

வவ்வால்கள் பார்க்க பறவை போன்று இருந்தாலும் பாலூட்டும் விலங்கு இனத்தை சேர்ந்தது. தலைகீழாக தொங்கக்கூடிய இந்த விலங்கின் முகம் பார்க்க நரி போன்று இருக்கும். ஆனால் அதற்கு இறக்கைகள் இருப்பதால் பறக்கும். எனவே இதை பறக்கும் ஓநாய் (பிளையிங் பாக்ஸ்) என்றும் அழைப்பது உண்டு.இவைகளுக்கு இரவு வாழ்க்கை தான் இனியவாழ்க்கை. இரவில் மட்டுமே பறந்து திரிந்து இரைதேடி வாழ்கின்றன. வவ்வாலில் 900 வகைகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில் அதிகம் இருப்பது பழந்தின்னி வவ்வால், தேன் குடிக்கும் வவ்வால், விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் வவ்வால் என 3 வகையான வவ்வால்கள் அதிகம் காணப்படுகிறது. சில வவ்வால்கள் மீன்களையும் பிடித்து உண்ணும். இவைகள் உணவுக்காக 50 கி.மீட்டர் தூரத்துக்கும் பறந்து செல்வது உண்டு. இதன் ஆயுள்காலம் 20 ஆண்டுகள் ஆகும்.

கூட்டமாக வாழும்

வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குகை, பொந்துகள், உயரமான மரங்கள் போன்றவையே அவற்றின் இருப்பிடம் ஆகும். அவற்றின் முன்னங்கைகளே இறக்கைகளாக உள்ளன. அதன் இறக்கை கால் மற்றும் முதுகுபுறம் வரை ஜவ்வு போன்று இணைந்து இருக்கிறது.வவ்வால்கள் இரவில் பறக்கும்போது மீயொலி அலைகளை அனுப்பி அவை எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்கள் மீது மோதி திரும்பி வருவதை கொண்டு அதன் தொலைவை கணக்கிடும் தகவல் அமைப்பு அதற்கு உண்டு. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர் வெண் அலைகளை மட்டுமே உணர முடியும். ஆனால் வவ்வால்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் வகையான ஒலி அலைகளை உணர முடியும்.

துல்லியமாக கண்டுபிடிக்கும்

இந்த தகவல் அமைப்பு மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள் அல்லது உயிரினங்கள் இருக்கும் தூரத்தை மட்டுமல்ல, அவற்றின் உடல் அளவைக்கூட மிக துல்லியமாக வவ்வால்களால் கண்டுபிடிக்க முடியும். வவ்வால்களுக்கு பார்வை திறன் உண்டு. ஆனால் அவற்றின் கண்கள் பெரிதாக பரிணாம வளர்ச்சி அடையாதவை.

பொதுவாக பறவைகள் தன் பலம் பொருந்திய இறக்கைகளை கீழ்நோக்கி உந்துவதன் மூலம் அவை மேலே பறக்கிறது. சில பறவைகள் தனது வேகத்தை அதிகரிக்க விமானத்தைபோல சிறிது தூரம் ஓடி வந்து பறக்க தொடங்கும். ஆனால் வவ்வால்களின் முன் மற்றும் பின் கால்கள் மிகவும் மிருதுவானவை. அதன் மூலம் அவை ஓடி வந்தோ, அல்லது இறக்கைகளை அடித்தோ பறக்கும் அளவுக்கு பலம் கிடையாது.எனவே இவை தலைகீழாக தொங்கி, விமானம் போல கீழே இறங்கி பின்னர் பறக்கிறது. மேலும் தலைகீழாக அவை தொங்குவதன் மூலம் மற்ற வேட்டை விலங்குகளிடம் இருந்து எளிதில் தப்பித்துக்கொள்கிறது. தலைகீழாக அவை தொங்கினாலும் அவற்றுக்கு உடல் சோர்வு ஏற்படுவது இல்லை.

வினோத உடல் அமைப்பு

வவ்வால்கள் பெரும்பாலும் தங்கள் குட்டிகளுடன் குடும்பமாக நீண்ட நாட்கள் இணைந்தே வாழ்கின்றன. இவை ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே போடும். தாய் வவ்வால் தனது குட்டியை லட்சக்கணக்கான வவ்வால்களுக்கு மத்தியில் இருந்தாலும் துல்லியமாக அடையாளம் கண்டுவிடும். தனிப்பட்ட ஓசை மற்றும் வாசனை அடிப்படையில் அது தனது குட்டியை இனம் காணுகிறது. ஒரு வவ்வாலால் ஒரு மணி நேரத்தில் 1200 கொசுக்களை உண்ண முடியும். இவ்வளவு தீவிரமாக பூச்சிகளை அவை சாப்பிடுவதால், பூச்சியினங்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும் தாவரங்களை தாக்கும் பூச்சிகளை அவை பிடித்து சாப்பிடுவதால், வவ்வால்கள் விவசாயிகளின் நண்பன் என்றும் அழைக்கப் படுகிறது. வவ்வாலுக்கு ஆசனவாய் கிடையாது. இதனால் அது வாயால் சாப்பிட்டு, கழிவுகளை வாயாலே கீழே வெளியேற்றும் வினோத உடலமைப்பை உடையது. அதன் கழிவு குவானோ என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கை உரம் ஆகும். இதை சேகரித்து விற்பது ஒரு காலத்தில் பெரும் தொழிலாகவும் இருந்துள்ளது.

உணவு சங்கிலியில் முக்கிய பங்கு

வவ்வால்கள் பழத்தாவரங்கள் பூக்க தொடங்கும் முன்பாகவே அதாவது மார்ச், ஏப்ரல் மாதங்களில் குட்டிகளை போடும். தனது குட்டியை இதுபோன்று வவ்வால் 4 முதல் 5 வாரங்கள் பாதுகாக்கும். பின்னர் 8 முதல் 12 வாரங்கள் பறக்க தொடங்கும். முழுவதுமாக பறக்க 12 வாரங்கள் ஆகும். குட்டியினை எதிரி விலங்குகள் தூக்கி சென்றுவிட்டால், தாயானது தனது குட்டியை கடைசியாக பார்த்த இடத்தில் வந்து அங்குமிங்கும் தேடும். இப்படியே ஒருவாரம் வரை தேடி கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும்.

வவ்வாலை, இறந்தவர்களின் ஆவி என்று சிலர் கூறி வருகிறார்கள். சில இடங்களில் அவை சாத்தான்களின் அடையாளமாகவும், தீய சக்தியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவை உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வவ்வால்கள் இல்லை என்றால் பூச்சிகள், கொசுக்கள் போன்ற சிறு உயிரினங்களின் தாக்கம் அதிகரித்து மனிதன் உள்பட பல விலங்குகள் அழிவு நிலையை சந்தித்து இருக்கும் என்றே வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com