‘நூடுல்ஸ்’: சில சுவாரசியத் தகவல்கள்...

சீன உணவு வகையான நூடுல்சை இந்தியர்கள் நாமும் அதிகம் ரசித்து ருசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
‘நூடுல்ஸ்’: சில சுவாரசியத் தகவல்கள்...
Published on

நூடுல்ஸ் குறித்த சில சுவாரசியத் தகவல்களைப் பார்க்கலாமா?

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் நிறைந்த கிண்ணம் ஒன்று சீனாவில் சிங்ஹாய் மாகாணத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. லஜியாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அங்கிருந்த படிவங்களுக்கு மூன்று மீட்டருக்கு அடியில் மண் பாண்டத்தில் அது புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட இடம்தான் லஜியா. இதற்கு முன்னதாக, கி.பி. 25 மற்றும் 220-க்குள் சீன கிழக்கு ஹான் வம்சாவளியினர் வாழ்ந்தபோது எழுதப்பட்ட புத்தகத்தில் நூடுல்ஸ் பற்றிய குறிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

தொழில்துறையில் வீழ்ச்சியை சந்தித்திருந்த தைவான்- ஜப்பானிய தொழிலதிபர் மொமெபுக்கு அண்டோ, ஜப்பானில் போருக்குப் பின் மக்கள் பசியுடன் இருந்ததைப் பார்த்து அவர்களுக்கு உணவளிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான், உலகில் தற்போது பிரபலமாக உள்ள உணவான சிக்கன் ரேமன் இன்ஸ்டன்ட் நூடுல்சாக உருவாகியுள்ளது. 1958-ம் ஆண்டு முதன்முதலில் உடனடி நூடுல்ஸ் விற்பனைக்கு வந்தது.

உலக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் நாள் ஒன்றுக்குச் சுமார் 27 கோடி மக்களால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உண்ணப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் உலகில் 10 ஆயிரம் கோடி கிண்ணம் நூடுஸ்ஸ் உட்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சீனாவில் மட்டும் 3 ஆயிரத்து 800 கோடி கிண்ணங்கள் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளனர். நூடுல்சுக்கான உலகின் முதல் பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்தான் என ஜப்பானியர்கள் கருதுகின்றனர். அதிவேக ரெயில், மடிக்கணினி எல்லாவற்றையும் தாண்டி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்தான் ஜப்பானியர்களால் சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் மூன்று பிரத்தியேக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அருங்காட்சியகங்கள் உள்ளன. அங்கு விதவிதமான நூடுல்ஸ் உண்ணக் கிடைக்கும். அத்தோடு, நூடுல்சின் வரலாறு, வகைகள் போன்ற தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக சத்தமாக சாப்பிடுவது அநாகரிகமாகக் கருதப்படுகிறது. அதை பல இடங்களில் தவறாகப் பார்ப்பார்கள். ஆனால், நீங்கள் ஜப்பானில் சாப்ஸ்டிக்ஸ் (உணவுண்ணும் குச்சிகள்) மூலம் நூடுல்ஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால், நன்கு சத்தம் வரலாம். அது, நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அதனை சமைத்தவர்களுக்கு தெரிவிப்பதாக அர்த்தம்.

அமெரிக்கச் சிறைகளில் சிகரெட்டுகளை விட, நூடுல்ஸ் அதிகமாக வாங்கப்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. சிறைகளின் செலவுத் திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், விலை குறைவான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களே சிறை நிர்வாகங்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது மிக நீளமான நூடுல்ஸ் கிடைக்கும். சீனாவில் நூடுல்ஸ் என்பது நீண்ட ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. நீளமான நூடுல்ஸ் இருந்தால், சீன பாரம்பரியப்படி நீண்ட ஆயுள் இருக்கிறது என்று அர்த்தம். மிக நீளமான நூடுல்ஸ் என்பது சாதாரணமாக உள்ள நூடுல்சை விட சற்று நீளமாக இருக்கும். சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, நூடுல்ஸ் வறுக்கப்பட்டோ அல்லது சாறில் வேகவைக்கப்பட்டோ கிடைக்கும். நீண்ட நூடுல்சை வெட்டுவது, சீனாவில் துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது.

ஓக் மரக் கொட்டையில் இருந்து செய்யப்படும் ஒரு நூடுல்ஸ் வகை கொரியாவில் பிரபலமாக உள்ளது. ஓக் கொட்டையில் இருந்து செய்யப்படும் மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து அந்த நூடுல்ஸ் தயாரிக்கப்படும். சிவப்பு மற்றும் வெள்ளை ஓக் மரக் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவுக்கு தனித் தனி சுவை உள்ளது.

உலகின் நீளமான நூடுல்ஸ் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது, ஒரு சீன உணவு நிறுவனம். அது தயாரித்த ஒரே ஒரு நூடுலின் நீளம் 3,084 மீட்டர்கள். அதாவது 3 கி.மீ. நீளத்துக்கும் அதிகம். சிங்நைன் உணவு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், 17 மணி நேரம் செலவிட்டு அந்த நூடுலை பாரம்பரிய ரேமன் செய்முறைப்படி தயாரித்தார். அதற்கு, 40 கிலோ ரொட்டி மாவு, 26.8 லிட்டர் தண்ணீர், 600 கிராம் உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. அது ஒரேயொரு நூடுல்தானா என்று ஒருவர் சோதனையிட்டார். அதற்கு அவருக்கு 3 மணி நேரம் ஆனது.

பாஸ்தாவுக்கு பல மொழிகளில் பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து மொழிகளிலும் நூடுல்ஸ் அந்தப் பெயரால்தான் அறியப்படுகிறது. உண்மையில், நூடுல்ஸ் என்ற வார்த்தை ஜெர்மன் மொழியைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம், லத்தீன் மொழி எனக் கருதப்படுகிறது. லத்தீன் மொழியில் நூடுல்ஸ் என்றால் முடிச்சு என்று பொருள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com