![[பனை மரம் ஏற புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்திரம். (உள்படம்: புதிய எந்திரத்தில் ஏறி பனை மர உச்சிக்கு சென்ற பெண்கள்.)]](http://media.assettype.com/dailythanthi%2F2026-09-16%2F0scncb4d%2F1.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
![[பனை மரம் ஏற புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்திரம். (உள்படம்: புதிய எந்திரத்தில் ஏறி பனை மர உச்சிக்கு சென்ற பெண்கள்.)]](http://media.assettype.com/dailythanthi%2F2026-09-16%2F0scncb4d%2F1.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இனி பெண்களும் பனை மரம் ஏறும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சி. வேளாண்மை கல்லூரியில் புதிய எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மாநில மரமான பனையின் அடி முதல் நுனி வரையிலும் மக்களுக்கு பயன்படுவதால் 'கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு சிறந்த இயற்கை உணவாகவும், பனை ஓலை, பனை நார் கூரை வேயவும், கூடை, கட்டில், முறம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.
பனை மரம் செங்குத்தாக அதிக உயரமாக இருப்பதால், அதில் ஏறுவது கடினமானது. பல ஆண்டுகளாக பனைத்தொழிலாளர்கள் தங்களது உடல் வலிமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தியே மரங்களில் ஏறி வருகின்றனர். பனை மரத்தின் உயரம் அதிகமாக இருக்கும்போது, ஏறும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதுடன், பாதுகாப்பு குறித்த அச்சமும் உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பனை மரத்தில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஏறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி இயங்கும் நவீன எந்திரத்தை டிராக்டருடன் இணைத்து பனை மரங்களின் அருகில் எடுத்துச் சென்று, மேலும் கீழும் செல்லுமாறு இயக்கலாம்.
இதை பயன்படுத்தி ஒருவர் எளிதாக பனை மரத்தின் உச்சி வரை சென்று விடலாம். மரம் ஏறத்தெரியாதவர்களும் எளிதில் இதை பயன்படுத்தலாம். இந்த எந்திரத்தை ஒரு மணி நேரத்திற்கு இயக்க 3 முதல் 4 லிட்டர் டீசல் செலவாகும். இந்த எந்திரம் மூலம் சுமார் 45 அடி உயரம் வரையிலான பனை மரத்தில் பாதுகாப்பாக ஏறலாம்.
இதன் மூலம் இனி பெண்களும் பாதுகாப்பாக பனை மரங்களில் ஏறலாம். பனை சார்ந்த தொழிலில் பெண்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த எந்திரத்தின் செயல்திறன் விளக்கம் குறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி தலைமையில், பனை மரம் ஏறும் நவீன எந்திரம் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் நவீன எந்திரத்தில் பனை மரம் ஏறினர்.
இதுகுறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலைய தலைவர் மணிவண்ணன் கூறுகையில், "பனை மரம் ஏறுவது ஆண்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி, முறையான பயிற்சியுடன் பெண்களும் பனை சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய எந்திரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பனை மரத்தையும், பனைத் தொழிலையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியின் இந்த தொழில்நுட்ப முயற்சி புதிய அத்தியாயமாக அமையும்” என்றார்.