எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள்

மனித உடலின் அனைத்து பகுதிகளையும் எலும்புகள்தான் ஒருங்கிணைக்கின்றன. எலும்புகளை எந்த அளவிற்கு வலுவாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்குதான் ஆரோக்கியமும் மேம்படும். எலும்பு புரை, எலும்பு தேய்மானம், எலும்பு நொறுங்குதல் போன்ற பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.
எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள்
Published on

முதுமையில் எலும்பு குறைபாடு சார்ந்த பிரச்சினைகள் இன்றி நிம்மதியாக இருக்கலாம். எலும்புகளின் உறுதி தன்மைக்கு ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கால்சியம்: எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியத்தின் பங்களிப்பு முதன்மையானது. சாப்பிடும் உணவுகளின் மூலம்தான் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் உறிஞ்சப்படும். அதனால் பால், சோயா, ஓட்ஸ், முட்டை, புரோக்கோலி, பச்சைக் காய்கறிகள், பாதாம் போன்ற கால்சியம் அதிகம் உள்ளடங்கிய உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி: எலும்புகளை பாதுகாக்க உதவும் கொலோஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி இன்றியமையாதது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருக்கும் என்பதால் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம்.

வைட்டமின் டி: காளான், முட்டையின் மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்றவை வைட்டமின் டி உள்ளடங்கிய உணவு பொருட்கள். இவற்றை சாப்பிடுவதோடு காலை வேளையில் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சியும் செய்து வரலாம். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்தும் உடலுக்கு போதுமானது.

வைட்டமின் கே: இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக எலும்பு தேய்மானம், விபத்தில் எலும்பு நொறுங்குதல் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் வைட்டமின் க சத்துக்கள் அதிகம் கொண்ட முட்டைகோஸ், காலிபிளவர், துளசி, கொத்தமல்லி, லெட்டூஸ் கீரை ஆகியவை சாப்பிடலாம். இவை எலும்பு பாதிப்பை சரி செய்ய உதவும்.

புரதம்: இதுவும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணக்கூடியது. குறிப்பாக எலும்புகள் தேய்ந்து, மெலிந்து போவதை தடுக்கக்கூடியது. பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, ஓட்ஸ், இறைச்சி போன்ற புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளலாம்.

மக்னீசியம்: எலும்புகளின் ஆரோக்கியத்தை சீராக பேணவும், அதன் உறுதித் தன்மையை பாதுகாக்கவும் மக்னீசியம் உதவும். 35 வயதை கடந்தவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்னீசியம் அதிகம் கொண்ட பச்சைக் காய்கறிகள், பூசணி விதைகள், வாழைப்பழம் போன்றவை அடிக்கடி சாப்பிடலாம்.

பாஸ்பரஸ்: எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை அதிகரிக்க பாஸ்பரஸ் உதவும். மீன், பால் பொருட்கள், பழங்கள், அவகொடோ, திராட்சை, அத்திப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் பாஸ்பரஸ் நிரம்பி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com