

கலை ஆர்வம்
ஜான்ஹவி குல்கர்னி கர்நாடகா மாநிலத்திலுள்ள தார்வாத் பகுதியை சேர்ந்தவர். இவர் நான்காம் வகுப்பு பயிலும்போதே தையல் கலையை கற்க ஆரம்பித்துவிட்டார். இவரது குடும்ப பெண்கள் ஹுன் துணியைப் பயன்படுத்தி ஜாக்கெட்டுகள் தைத்து அணிந்து வந்திருக்கிறார்கள். `ஹுன் என்பது பட்டு மற்றும் பருத்தி நூல் சேர்த்து தயாரிக்கப்படும் துணி வகைகள் ஆகும். இது 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரீகம் என்று கூறப்படுகிறது.
டெக்ஸ்டைல் படிப்பு
சிறு வயது முதலே தையல் கலை மீது கொண்ட ஈடுபாட்டால் மும்பை பல்கலைக்கழகம் ஒன்றில் டெக்ஸ்டைல் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்டார். அந்த படிப்பை சிறப்பாக படித்து முடித்து தங்கப் பதக்கமும் வென்றார். அதன் பின்னர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றினார். இதற்கிடையே, தனது குடும்பத்தினர் பின்பற்றி வந்த ஹுன் துணியை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரும்பினார். முதலில் நெசவாளர்கள் துணையுடன் ஹூன் துணியை புடவையாக நெய்ய முயன்றார். ஆனால், அது பலனிக்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியை ஜான்ஹவி கைவிடவில்லை. ஒரு வருட போராட்டத்திற்கு பின்பு ஹூன் துணிக்கு புது வடிவம் கொடுத்துவிட்டார். அதன் பின்னர் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண்களுக்கு நெசவு பயிற்சி அளித்தார். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் புடவைகளை நெசவு செய்ய முடிந்தது.
புதிய தொடக்கம்
கடந்த 2016-ம் ஆண்டில் சொந்த நிறுவனம் தொடங்கி ஹுன் நூலால் நெய்யப்பட்ட புடவையை விற்பனை செய்யத் தொடங்கினார். அதுமட்டுமின்றி தலையணை உறை உள்ளிட்ட பொருட்களையும் தயாரித்தார். அது நாடு கடந்து வரவேற்பை பெற்றது. முதல்முறையாக அமெரிக்காவில் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு பரிசளிக்க பெரிய ஆர்டர் ஒன்றை கொடுத்தது. அதை ஜான்ஹவி குல்கர்னி சிறப்பாக செய்து முடித்தார். அதன் பின்னர் ஆர்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
வருமானம்
தற்போது அவரின் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. பெங்களூரு ரெயில் நிலையம் அருகே முதல் முறையாக விற்பனையகம் திறக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை ஆன்லைன் வழியாக மட்டுமே ஆர்டர்கள் பெறப்பட்டன. எனினும், கடந்த ஆண்டில் மட்டும் இவரது நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.