

பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் விதமாக உணவு வங்கிகள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. அங்கு வைக்கப்படும் உணவு பொட்டலங்களை, கையில் போதிய பணம் இல்லாமல் பசியோடு திரிபவர்கள் எடுத்து சென்று பசியை போக்கிக்கொள்கிறார்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள், உதவும் உள்ளம் கொண்டவர்கள், தன்னார்வலர்கள் முயற்சியால் உணவு வங்கிகள் நிர்வகிக்கப்படுகின்றன. உணவைப் போலவே உடுத்தும் ஆடைகளையும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் துணி வங்கிகளும் சில இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுள் தனி கவனம் ஈர்க்கும் துணி வங்கி ஒன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்திருக்கிறது. இங்கு ஒரு ரூபாய் விலையில் துணிகளை ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். இதற்கு பின்னணியில் உள்ள காரணம், வாங்குபவர்களின் கண்ணியத்தை நிலை நிறுத்துவதாகும். இலவசமாக கொடுக்கும்போது சிலருக்கு வாங்குவதில் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தோன்றும். அதனை தவிர்க்கவே ஒரு ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறோம் என்கிறார்கள், துணி வங்கியை நிர்வகிப்பவர்கள். இந்த வங்கி நான்கு கல்லூரி நண்பர்களின் சிந்தனையில் உருவாகி இருக்கிறது. அவர்கள் பெயர், வினோத்-அவரது மனைவி மெலிஷா நோரோன்ஹா, நிதின், விக்னேஷ்.
இவர்களில் நிதினும், வினோத்தும் மங்களூருவில் கல்லூரியில் படித்த காலத்தில் அங்கு துணி வங்கியை நடத்தி வந்திருக்கிறார்கள். அதன் மூலம் வசதியற்றவர்கள் பலர் பயனடைந்திருக்கிறார்கள். பணி நிமித்தமாக பெங்களூருக்கு இடம் பெயர்ந்ததும் துணி வங்கியை நிர்வகிக்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் மெலிஷா நோரோன்ஹா தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் முழு நேரமாக ஈடுபட தொடங்கி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து மீண்டும் துணி வங்கியை தொடங்கி நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்கள் அனுபவித்த துயரங்களை நேரில் பார்த்த இவர்கள், பெங்களூருவில் துணி வங்கி தொடங்குவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். இதற்காக `தி இமேஜின் டிரஸ்ட்' என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் தன்னார்வலர்கள் துணையுடன் துணி வகைகள் மற்றும் நிதி திரட்டி துணி வங்கியை ஆரம்பித்துவிட்டார்கள்.
நாங்கள் கொரோனா காலகட்டத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை. நிறைய பேர் கஷ்டப்படுவதை பார்த்ததும் மனம் வேதனைக்குள்ளானது. எங்களுக்கு சமூக சேவையில் ஈடுபாடு உண்டு. எங்கள் நோக்கத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்தோம். இதுதான் சரியான தருணம் என்று தோன்றியது. துணி வங்கியை தொடங்கிவிட்டோம். ஏழை, எளிய மக்கள் கடைக்குச் செல்வது போல உள்ளே வந்து கண்ணியத்துடன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு இடம் வேண்டும்.
அவர்கள் விருப்பமான ஆடைகளை மன நிறைவோடு தேர்வு செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கிடைக்கும் ஆடைகள் பெரும்பாலும் அவர்கள் விரும்பும் ஒன்றாக அமைந்திருப்பதில்லை. மற்றவர்களால் நிராகரிக்கப்பட்டவைதான் அவர்களை சென்றடையும். அந்தக் குறையை போக்க வேண்டும். அவர்கள் விரும்பும் ஆடைகளாக அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்கிறார், மெலிஷா நோரோன்ஹா.
இந்த துணி வங்கியில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆடைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் துணி வங்கி செயல் படுகிறது. தகுதியான நபர்களுக்கு ஆடைகள் கிடைக்க வேண்டும், குறிப்பாக ஏழைகள், அவர்கள் விரும்பும் எதையும் உரிமையுடன் தேர்ந்தெடுப்பதற்கான சூழலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக இரண்டு அறைகள் கொண்ட கட்டிடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அங்கு வயது வாரியாக துணி வகைகள் வரிசையாக தொங்க விடப்பட்டுள்ளன. ஏழைகள் உள்ளே சென்று தங்களுக்கு பிடித்தமானதை தேர்ந் தெடுத்துச் செல்லலாம் என்கிறார்கள். பழைய துணி வகைகள் என்ற எண்ணம் தோன்றாமல் அவை தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
``எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் தன்னார்வலர்களை நியமித்துள்ளோம். எங்களது வழிகாட்டுதலின்படி செயல்பட்டு தரமான துணி வகைகளை அனுப்பி வைக்கிறார்கள். ஆரம்பத்தில் சிறிய குழுவாக இயங்கினோம். இப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நன்கொடைகள் வருகின்றன.
வெளிநாட்டில் உள்ளவர்களும் உதவுகிறார்கள். உடுத்தும் ஆடைகள் மட்டுமின்றி பெட்ஷீட்கள், துண்டுகள், திரைச்சீலைகள் போன்றவையும் துணி வங்கியில் இடம்பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் திரைச்சீலைகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால் அதை அலங்காரப் பொருளாகத்தான் பார்த்தோம். ஏழை வீட்டில், திரைச்சீலை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். அது ஆரம்பரப் பொருளாக அல்லாமல் அவசிய தேவைக்குரியதாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறோம். ஏழை குழந்தை களுக்காக பொம்மைகளை சேகரித்து, தனியாக ஒரு வங்கியை நிர்வகிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்கிறார், மெலிஷா நோரோன்ஹா.