ஆக்சிஜன் பற்றாக்குறையும்.. அவசியமான மர வளர்ப்பும்..

கொரோனா நொய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகி ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் துயர சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறையும்.. அவசியமான மர வளர்ப்பும்..
Published on

இத்தகைய சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனை, உயிர் மூச்சில் கலக்கும் ஆக்சிஜனின் அவசிய தேவை குறித்து பொதுமக்களிடமும், நோயாளிகளிடமும் எடுத்துரைக்க தனித்துவமான வழிமுறையை கையாண்டுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிலிண்டர் நிரப்பப்பட்ட ஆக்சிஜன் சப்ளை மூலம் சுவாசம் பெற்று சிகிச்சையில் பூரண குணமாகி வீடு திரும்பும் நோயாளிகளிடம் ஒரு குறிப்பு வழங்கப்படுகிறது. அதில், சிகிச்சையில் இருந்தபோது எவ்வளவு ஆக்சிஜன் அந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது எழுத்து பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளாவது நடுங்கள்

என்ற வேண்டுகோளையும் மருத்துவமனை நிர்வாகம் முன்வைத்திருக்கிறது.

சமீபத்தில் 41 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உடல்நிலை மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அங்கு ஒருவாரம் அவருக்கு தீவிர சிகிச்சை

மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்போது அவருக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டிருக்கிறது. டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பி இருக்கிறார். அப்போது அவரிடம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜன் அளவை குறிப்பிட்டு மரக்கன்று நடுமாறு டாக்டர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதுபற்றி அந்த பெண் குறிப்பிடுகையில், ஆக்சிஜன் எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை கொரோனா எனக்கு உணர்த்திவிட்டது. இயற்கை நமக்கு ஆக்சிஜனை இலவசமாகவே வழங்குகிறது. அதை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலொழிய மக்கள் அதை பற்றி புரிந்துகொள்ளமாட்டார்கள் என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேஷ் ஸ்வர்ணக்கர் என்னிடம் தெரிவித்தார். துரதிருஷ்டவசமாக நாடு இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு புரியவைக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்குள் நான் 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பேன் என்கிறார்.

அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராஜேஷ் ஸ்வர்ணக்கர் கூறுகையில், நாம் இயற்கையை சுரண்டிக்கொண்டிருக்கிறோம். அதற்கு நாம் எதுவும் திருப்பி கொடுக்க முயற்சித்ததில்லை. ஆனால் இன்று அதை செய்வது மிகவும் முக்கியம். நாங்கள் கொரோனா நோயாளிகளிடம், டிஸ்சார்ஜ் ஆகும்போது அவர்கள் எவ்வளவு ஆக்சிஜனை பயன்படுத்தினார்கள் என்பதை குறிப்பிடுவதோடு அனைவருக்கும் இலவசமாக ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்காக குறைந்தது 10 மரக்கன்றுகளை நடவு செய்யுமாறு வேண்டுகிறோம் என்பவர் இந்த யோசனை எப்படி உதித்தது என்பதையும் விவரிக்கிறார். ஒரு மருத்துவர் நோயாளிடம், குணமடைந்து வீடு திரும்பிய பிறகு மரக்கன்று நடுங்கள் என்று கூறியது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் எனக்கும் நோயாளிகளிடம் மரங்களை நடவு செய்வதற்கு அறி வுறுத்த வேண்டும். அத்துடன் சிகிச்சையின் போது எவ்வளவு ஆக்சிஜனை உபயோகித்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சிகிச்சையின்போது எவ்வளவு ஆக்ஸிஜனை பெற்றார்கள் என்பதை அறிந்தால்தான் அதன் உண்மையான மதிப்பை அவர்களால் உணர முடியும். நான் சிறுவனாக இருந்தபோது நாக்பூர் நகரம் பசுமையாக இருந்தது. அப்போது பசுமை நகரம் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி விமர்சிக்கும்போது, இலவச ஆக்சிஜனை வழங்கும் இயற்கையை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பற்றியும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்கிறார்.

ஒருவர் நிமிடத்திற்கு 7-8 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும்போது எடுத்துக்கொள்கிறார். ஒரு நாளைக்கு 500 லிட்டர் தூய ஆக்சிஜன் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது இந்த எண்ணிக்கை சற்று

அதிகரிக்கும். நோய் பாதிப்புக்குள்ளாகி வெண்டிலேட்டர் மூலம் சுவாசிக்கும்போது நிமிடத்திற்கு 90 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com