புதுமை விவசாயியாக மாறிய ஆசிரியர் வடிவமைக்கும் ‘நெல் கலை’

ஜான்சன் ஒலிப்புரம்.. 55 வயதாகும் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். 13 ஆண்டுகளாக ஆந்திரா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வந்திருக்கிறார்.
புதுமை விவசாயியாக மாறிய ஆசிரியர் வடிவமைக்கும் ‘நெல் கலை’
Published on

ஒரு கட்டத்தில் சொந்த மாநிலத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க விரும்பியவர், ஆசிரியர் பணியை கைவிட்டு சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். அங்கு இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு அதிகரிக்கவே வேளாண்மையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பாரம்பரிய அரிசி வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க, நெல் வகைகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது 28 வகையான அரிசி ரகங்களை பாதுகாத்து வருகிறார். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும், இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முனைப்போடும், விவசாயிகள் மத்தியில் விளைச்சல் மீதான நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் நெல் கலையை கையில் எடுத்திருக்கிறார். இவருடைய வயலின் ஒரு பகுதியில் வளர்க்கப்படும் நெல் ரகங்கள் ஒளிரும் தீபம் போன்ற வடிவத்தில் காட்சி தருகின்றன. இதற்காக பல்வேறு வண்ணங்களை கொண்ட நெல் வகைகளை நடவு செய் திருக்கிறார்.

ஜப்பான் நாட்டில் வயல் வெளிகளில் நெல் ரகங்களை ஓவியங்கள் போல் பயிரிட்டு அழகுடன் காட்சியளிக்க வைக்கும் கலை பிரபலமானது. அதே பாணியில் ஜான்சன் இந்த நெல் கலையை காட்சிப்படுத்தி இருக்கிறார். அதற்கான காரணத்தை விவரிப்பவர், எனது நெல் பண்ணையில் நான்கு விதமான அரிசி ரகங்களை பயன்படுத்தி ஒளிரும் விளக்கை உருவாக்கினேன். விவசாயிகள் நம்பிக்கையை கைவிடவில்லை என்பதையும், கொரோனா சவால்களை நாங்களும் சமாளிப்போம் என்பதையும் நிரூபிப்பதற்கான அடையாளமாக இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன் என்கிறார்.

இந்த நெல் கலைக்கு பயன்படுத்தி இருக்கும் நான்கு அரிசி வகைகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாசர்பத் என்ற ரகம் பழுப்பு நிற இலைகளுடன் காட்சி அளிக்கிறது. விளக்கின் மைய பகுதியில் கருப்பு இலைகள் கொண்ட கலாபத் நெல் ரகத்தை விதைத்திருக்கிறார். மேலும் தங்க பழுப்பு நிறம் கொண்ட கிளெரோ அரிசி வகையையும், இருண்ட நிறம் கொண்ட ககிஷாலா வையும் பயன்படுத்தி இருக்கிறார். ஜான்சன் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்கிறார். அவற்றுள் 20 சென்ட் நிலத்தில் நெல் கலைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அந்த இடம் பொதுமக்கள் நடமாட்டம் கொண்ட சாலையோர பகுதியில் அமைந்திருக்கிறது. விவசாயம் மீது மக்களின் கவனத்தை ஈர்க்கவைப்பதற்கான முயற்சி இது என்றும் சொல்கிறார். நான் செய்யும் விவசாயத்தின் மூலம் மக்களை தொடர்பு கொள்வதற்கான சாதனமாக நெல் கலையை பயன்படுத்து கிறேன். ஒரே விதமாக காட்சியளிக்கும் வயல் வெளியில் சற்று வித்தியாசம் தென்படுவதை பார்த்தவுடன் மக்களிடம் ஆர்வம் எழுகிறது. வயல்வெளி ஏன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது என்ற கேள்வியை முன்வைப்பார்கள். என்னை பற்றியும், என் விவசாய பண்ணையை பற்றியும் விசாரிப்பார்கள் என்று கருதினேன். என் முயற்சி வீண் போகவில்லை. கொரோனா, விவசாயிகளுக்கு பல துயரங்களையும், சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. அதேவேளையில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவது பற்றி மக்களை சிந்திக்கவும் வைத்துள்ளது. இயற்கை விவசாயம் மீதும் ஈடுபாடு அதிகரித்துள்ளது என்று பெருமிதம் கொள்பவர், ஆசிரியரான தனக்கு விவசாயத்தின் மீது மோகம் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறார்.

வயநாடு பகுதியில் இருக்கும் பழங்குடியின குக்கிராமங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் ரசாயனத்திற்கு இடம் கொடுக்காமல் பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றி பயிர்களை விளைவிப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். அவர்களிடம் இருந்துதான் இயற்கை விவசாயம் குறித்த பாரம்பரிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். தங்களுடைய விவசாய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அப்போது பல்வேறு வகையான அரிசி ரகங்கள் குறித்தும், அவற்றின் மருத்துவ மதிப்பு குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது என்கிறார்.

ஜான்சன் முழு நேர விவசாயத்திற்கு மாறி இருந்தாலும் கற்பித்தல் பணியை கைவிடவில்லை. பழங்குடியின குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் ஆங்கில மொழியை கற்றுக்கொடுத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com