அரண்மனை நகரங்கள்

மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் இன்றளவும் கலை அம்சங்களுடனும், கம்பீரமாகவும் காட்சியளித்து இன்றைய நவீனகால கட்டிடக்கலைக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கின்றன.
அரண்மனை நகரங்கள்
Published on

புகழ் பெற்ற ராஜ வம்சங்கள் ஆட்சி புரிந்த அரண்மனைகள் இன்று பாரம்பரியமிக்க, பிரமாண்டமான ஓட்டல்களாகவும், அருங்காட்சியகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்தியாவின் சிறந்த 5 அரண்மனை நகரங்களின் பட்டியலை இங்கே தருகிறோம்.

ஜோத்பூர், ராஜஸ்தான்:

ராஜ்புத் ராஜா ராவ் ஜோதா என்ற மன்னரால் கட்டமைக்கப்பட்ட கலை நகரம், ஜோத்பூர். அங்கு 1200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் மெஹ்ரான்கர் கோட்டையின் அழகு ஜோத்பூரின் பாரம்பரிய வரலாற்றையும், கட்டிடக்கலையின் தனித்துவத்தையும் கலைநயம் மாறாமல் இன்றளவும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. புளூ சிட்டி என்று அழைக்கப்படும் இந்த நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ராஜஸ்தானின் பண்டைய வரலாற்று பொக்கிஷங்களின் எச்சங்கள் பதிந்திருக்கும்.

மைசூரு, கர்நாடகா:

மன்னர் கால வரலாற்றின் எந்த சுவடும் மாறாமல் அதே சாயலில் பிரதிபலித்துக்கொண்டிருக்கும் அரண்மனை நகரம், மைசூரு. மன்னர் திப்பு சுல்தான் மற்றும் 1399 முதல் 1950-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த வாடியார் வம்சத்துடன் இந்த அரண்மனை நெருங்கிய தொடர்புடையது. மைசூரு பேலஸ் என்று அழைக்கப்படும் இது நகரத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

உதய்பூர், ராஜஸ்தான்:

இதுவும் ராஜஸ்தானின் மற்றொரு மன்னர் காலத்து நகரமாகும். பிச்சோலா ஏரியை சூழ்ந்திருக்கும் பழங்கால கட்டமைப்புகள் பழமை மங்காமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏரிக்கு நடுவே அமைந்திருக்கும் தாஜ் ஏரி அரண்மனை புகழ்பெற்ற ஓட்டல்களில் ஒன்றாக விளங்குகிறது. பளிச் வெண்மை நிறத்தில் ஏரிக்குள் பிரகாசிக்கும் அதன் தோற்றத்தை பார்த்தாலே அங்கு செல்வதற்கு ஆசை துளிர்விட்டுவிடும். சிட்டி பேலஸ், மான்சூன் பேலஸ் உள்ளிட்ட சில அற்புதமான அரண்மனைகளால் இந்த நகரம் சூழப்பட்டுள்ளது.

குவாலியர், மத்திய பிரதேசம்:

குவாலியரில் அமைந்துள்ள ஜெய் விலாஸ் அரண்மனை மராட்டிய சிந்தியா வம்சத்தின் வசிப்பிடமாக விளங்கி இருக்கிறது. இன்று, இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் முகலாய மன்னர்களின் உடமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர், ராஜாக்கள் மற்றும் ராணிகளுடன் நீண்ட கால வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ளது. திரும்பிய திசையெங்கும் கலை நயமுடன் மன்னர்கள் கால கட்டமைப்புகளை பொலிவு மாறாமல் காண முடியும். அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமர் கோட்டை, நஹர்கர், ஹவா மஹால், சிட்டி பேலஸ் மற்றும் ஜல் மஹால் போன்ற இடங்கள் ராஜாக்கள் குடும்பத்தின் ஆடம்பரத்தையும், கலை திறனையும் காட்சிப்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com