

ஆரம்பத்தில் எலிகளை வேட்டையாடவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு அதை செல்லப்பிராணியாக வளர்க்க தொடங்கினர். பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணி. வீடுகளில் வளர்க்கப்படுவதால் சைவ உணவையும் உண்ணும்.
மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தன் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகள் நுழைந்து சென்றுவிடும். பூனைகளுக்கு சிறந்த இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. எனவே, இரவில் சிறு சத்தம் கேட்டாலும் இரையை வேட்டையாடி உண்டுவிடும். பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகம். சத்தமின்றி வேட்டையாடும் திறமை பூனைக்கு உண்டு.
பூனைகள் பெரும்பாலும் 4-5 கிலோ எடை கொண்டவை. பூனைகளின் சராசரி உயரம் 23-25 செ.மீ மற்றும் உடல் நீளம் 46 செ.மீ, பூனையின் வால் சராசரியாக 30 செ.மீ நீளமுடையதாக இருக்கும். பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் உண்டு. அதனால் காது பகுதியை 180 டிகிரி வரை அசைக்க முடியும். கூடவே இரண்டு காதுகளையும் தனித் தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலையும் கொண்டது. தாடையிலுள்ள 35 பற்களும் இரையைக் கொல் லும் வகையிலும், மாமிசத்தை கிழிக்கும் வகை யிலும் அமைந்துள்ளன. குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வை திறன், பூனைகளுக்கு உண்டு.
தெரியுமா..?
* பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12-15 ஆண்டுகள்.
* ஒருநாளில் 13-14 மணி நேரத்தை தூங்குவதிலேயே கழித்துவிடுகின்றன.
* வாழ்நாளின் பெரும்பகுதியை தன்னை சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும்.
* 100-க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியது.
* மனிதர்களின் கைரேகையினை போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள் தனித்துவமானவை.
* பூனைகளின் சிறுநீர் புற ஊதா ஒளியிலும் (யு.வி.லைட்) ஒளிரும் தன்மை கொண்டது.
* பெண் பூனைகள் வலது கால் பழக்கமுடையது, ஆண் பூனைகள் இடது கால் பழக்கமுடையது.
* மிக உயரத்திலிருந்து விழுந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பூனைக்குட்டிகளை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..?