பயண நினைவுகளை பதிவு செய்ய பிலாட்டலி பாஸ்போர்ட்: தமிழ்நாடு தபால் துறை புதிய முயற்சி

கர்நாடகாவுக்கு அடுத்து இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழ்நாட்டில் இது அறிமுகமாகி இருக்கிறது.
பயண நினைவுகளை பதிவு செய்ய பிலாட்டலி பாஸ்போர்ட்: தமிழ்நாடு தபால் துறை புதிய முயற்சி
பிலாட்டலி பாஸ்போர்ட்
Published on: 

தமிழ்நாடு தபால் துறை ஒரு சூப்பரான புது பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் 'பிலாட்டலி பாஸ்போர்ட்'. இதை வைத்துக்கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் செய்ய முடியாது. இது தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கான நினைவு புத்தகம்.

என்ன இது?

கர்நாடகாவுக்கு அடுத்து இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழ்நாட்டில் இது அறிமுகமாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி ராதிகா சக்கரவர்த்தி இதை வெளியிட்டார். அக்டோபர் 19-ம் தேதி முதல் இது விற்பனைக்கு வந்துள்ளது.

விலை எவ்வளவு? எங்கே வாங்க முடியும்?

இதன் விலை ரூ.650 மட்டுமே. இந்த பாஸ்போர்ட்டை நேரில் சென்று பணம் செலுத்தி மட்டும்தான் வாங்க முடியும்; ஆன்லைனில் வாங்க முடியாது. இந்த பாஸ்போர்ட் தமிழ்நாட்டில் 4 இடங்களிலும், புதுச்சேரியிலும் மட்டுமே கிடைக்கும். அவை: சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், கோவை தலைமை தபால் நிலையம், மதுரை தலைமை தபால் நிலையம், திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களாகும்.

58 இடங்கள், 58 அஞ்சல் முத்திரைகள்

இந்த பாஸ்போர்ட்டின் சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள 58 முக்கிய இடங்களுக்கு போய் அங்குள்ள தபால் நிலையத்தில் அந்த இடத்துக்கான சிறப்பு முத்திரையை வாங்கி பாஸ்போர்ட்டில் பதிக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், கன்னியாகுமரி, கொடைக்கானல், கும்பகோணம் போன்ற இடங்கள் இதில் அடங்கும்.

எதற்கு இது?

அஞ்சல் தலை சேகரிக்கிற பழக்கம் இப்போது குறைந்து கொண்டே வருகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் மீண்டும் அந்த ஆர்வத்தைக் கொண்டு வரவும், தமிழ்நாடு சுற்றுலாவை ஊக்குவிக்கவும்தான் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பாஸ்போர்ட் அடர் நீல நிற அட்டையில் தங்க நிறத்தில் தமிழ்நாடு வரைபடத்துடன் இருக்கும்.

என்னென்ன இருக்கும்?

முதல் பக்கத்தில் 'பிலாட்டலி என்றால் என்ன?', 'இந்தப் பாஸ்போர்ட்டை எப்படி பயன்படுத்துவது?', 'இந்த பாஸ்போர்ட் வெளிநாடு போக உதவாது' என்ற குறிப்பு மற்றும் உங்கள் பெயர், தேதி எழுத இடம் இருக்கும். உள்பக்கத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளின் வரைபடம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் அந்த பகுதியை பற்றிய சிறு குறிப்பு, சிறப்பு முத்திரையைப் பதிக்க தனி இடம் ஆகியவை இருக்கும்.

நீங்கள் 58 ஊருக்கும் போய் முத்திரை வாங்கிவிட்டால், அந்த புத்தகமே உங்கள் தமிழ்நாடு சுற்றுலாவின் நினைவு சின்னமாக மாறிவிடும்.

X