நடவு ஒருமுறை, அறுவடை பலமுறை..!

மரபணு மாற்றப்பட்ட புதிய வகை நெல் விதையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நெல் விதையை ஒரு முறை நடவு செய்தால் போதும், நிரந்தரமாக மகசூல் செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடவு ஒருமுறை, அறுவடை பலமுறை..!
Published on

உலகளவில் வேளாண் சாகுபடியில் தினமும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக் கூடிய தானியங்கள், பயிர்களைப் பயிரிட முனைப்புக் காட்டுகின்றனர்.

அந்த வகையில் 1980-ம் ஆண்டுகளில் ஒருமுறை நடவு செய்து பலமுறை நெல் அறுவடை செய்யக்கூடிய வகையில் மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளைக் கண்டுபிடித்தனர். அதாவது, ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே இந்த மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படை.

பாரம்பரிய சாகுபடி முறையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்பதால், இந்த உயிரி தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன் படுத்தி வருகின்றனர்.

இந்த முறையில் தற்போது வரை கோதுமை, சோளம், அரிசி போன்ற தானியங்கள் சோதனை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அரிசி விதை (நெல்) சார்ந்த ஆராய்ச்சிகள் திருப்திகரமான முடிவுகளை கொடுத்திருப்பதால் அதை சீன விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில், விஞ்ஞானிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த முறையின்படி விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நெல் விதைகளை நடவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை அறுவடை செய்யப்பட்ட பின்னர், அதே இடத்தில் மீண்டும் அந்த நெற்பயிர் வளரும் திறன் கொண்டதாக இருக்கும். மற்ற தாவர வகைகளைப் போன்று இந்த வகை நெற்பயிரில் இருந்து நெல்லை உற்பத்தி செய்ய முடியும்.

மரபணு ரீதியாக கண்டறியப்பட்ட இந்த வகை நெல் விதைகளைப் பயன்படுத்த, விவசாயிகளுக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் ஷென்சென் பி.ஜி.ஐ. ரிசர்ச் நிறுவன தலைமை விஞ்ஞானி லியு ஹுவான், "புதிய வகை நெல் விதை கண்டுபிடிப்பு என்பது உலகளவில் விவசாய துறையில் புரட்சிகரமான திட்டமாகும்.

இந்த வகை நெல் விதைகளை வயலில் ஒரு முறை விதைத்தால் போதும். அதிலிருந்து தொடர்ந்து நெல்லை சாகுபடி செய்யலாம். எங்களது ஆராய்ச்சியின் முடிவில், பாரம்பரிய நெல் வகைகளைக் காட்டிலும், இந்த வகை நெல்லானது இரண்டு மடங்கு மகசூலைத் தரும் என்பதை கண்டறிந்திருக்கிறோம்.

இன்றைய நிலையில் விவசாயத்திற்கு அதிநவீன இயந்திரங்கள் கிடைப்பதில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த புதிய வகை நெல் சாகுபடி உதவும்.

குறைந்தளவு விவசாய நிலத்தை மட்டுமே பயன்படுத்தி நிரந்தரமாக நெல் சாகுபடி செய்ய முடியும் என்பதால், பயன்படுத்தாத விளைநிலங்களை கூட மீண்டும் பயன்படுத்த முடியும்.

இதன்மூலம் அதிகளவில் நெல் உற்பத்தி செய்ய முடியும். சீன விவசாய அமைச்சகம் இந்த புதிய நெல் வகைகளை ஊக்குவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com