

80 தொகுதிகளை கொண்ட பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றினால் மத்தியில் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எப்போதும் தேசிய கட்சிகளுக்கு உண்டு.
அந்த நம்பிக்கையில்தான் இந்த தேர்தலில் ராகுல் காந்தி, கடைசி அஸ்திரமாக தனது சகோதரி பிரியங்காவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆக்கி கிழக்கு உத்தரபிரதேச மாவட்டங்களின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
பிரியங்காவின் அரசியல் பிரவேசம் காங்கிரசாருக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. ராகுலால் சாதிக்க முடியாததை பிரியங்கா சாதித்துவிடுவார் என்றும், கட்சி புத்துயிர் பெற்று வீறுகொண்டு எழுந்துவிடும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.
சிலர், சோனியாவுக்கு மாற்று ராகுல் காந்தி அல்ல பிரியங்காதான். அவர் கையில்தான் கட்சியின் எதிர்காலமே இருக்கிறது என்றும் கணக்குப் போட்டார்கள்.
பிரியங்கா அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போலவே இருக்கிறார் என்றும், பாட்டியைப் போல் பேத்தியும் சாதிப்பார் என்றும் கணித்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. அவரும் மக்களுடன் நெருங்கி பழகினார்; குழந்தைகளை கொஞ்சினார்; பாம்பாட்டியுடன் அமர்ந்து பாம்பை கையில் எடுத்து வியப்படையச் செய்தார். அத்துடன் மோடியை துரியோதனன் அது, இது என்று வசைபாடினார்.
இப்படி அவரும் என்னென்னலாமோ செய்து பார்த்தார். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். பிரியங்காவின் அரசியல் பிரவேசம் உத்தரபிரதேச மாநிலத்தில் கூட காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை. அவரது தாயார் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியால் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் ஜனதா கூட்டணி வேட்பாளர் ராஜ்நாராயணிடம் ராகுலின் பாட்டி இந்திரா காந்தியிடம் தோல்வி அடைந்தார். இப்போது அமேதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வி கண்டு இருக்கிறார்.
கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் தாயும், மகனும் மட்டும் வெற்றி பெற்று இருந்தார்கள். இந்த தேர்தலில் அங்கு காங்கிரசுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரேயொரு இடம் மட்டுமே கிடைத்து இருக்கிறது.
நேரு காலத்தில் இருந்தே உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. இந்திராகாந்தி தனது ஆட்சியின் போது கொண்டு வந்த நெருக்கடி நிலையால் அந்த கோட்டையில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பாரதீய ஜனதா கட்சிகளின் வளர்ச்சியால் சரிய தொடங்கிய காங்கிரசின் செல்வாக்கு இப்போது அதலபாதாளத்துக்கு சென்று இருக்கிறது.
மங்கி வரும் காங்கிரசின் செல்வாக்கை பிரியங்காவின் வருகை தூக்கி நிறுத்தும் என்று அக்கட்சி தலைவர்கள் மலைபோல் நம்பி இருந்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை வீணாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
பிரியங்காவும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று குடும்பத்தை கவனித்துக் கொண்டு நிம்மதியாக இருந்தார். கட்சியை காப்பாற்றுவதற்காக அவரையும் அரசியலுக்கு கொண்டு வந்து, அவருக்கு ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.
அண்ணனும் தங்கையும் சேர்ந்து காங்கிரசை எப்படி கரையேற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொண்டாட இயலாத வெற்றி
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்
சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்
அப்படிப்பட்ட ஒரு நிலையை இந்த தேர்தல் சிலருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு காலத்தில் இந்தியாவே காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதால், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தஸ்தை கூட இழந்தது.
அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது, அக்கட்சியினருக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.
ஆனால் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் இந்த முறையும் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து இருக்கிறது.
20 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட கேரளா, 13 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலங்கள் மட்டுமே இந்த தேர்தலில் காங்கிரசுக்கு கை கொடுத்து இருக்கின்றன.
கேரளாவில் 2014-ல் இங்கு 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் இப்போது 15 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. பஞ்சாபில் முன்பு 3 இடங்களில் வெற்றி பெற்ற அந்த கட்சி இப்போது 8 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.
இதேபோல் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்து இருந்தாலும், அதற்கு வலுவான தி.மு.க. கூட்டணிதான் காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இங்கு தனித்து களம் கண்ட காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய சந்தோஷத்தை கொண்டாடுவதா? அல்லது ஆந்திரா, குஜராத், காஷ்மீர், அரியானா, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், டெல்லி மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகார் உள்ளிட்ட 18 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத பரிதாபநிலையை நினைத்து வருந்துவதா? என்ற நிலையில் அக்கட்சி உள்ளது.
இதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க. இந்த முறை போட்டியிட்ட 19 தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறது. அக்கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 4 பேரும் வெற்றி பெற்று இருப்பதால், நாடாளுமன்றத்தில் அவர்களும் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அந்த வகையில் தி.மு.க.வுக்கு 23 எம்.பி.க்கள் கிடைத்து இருக்கிறார்கள்.
தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. என்றாலும் தேசிய அளவில் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்து இருப்பதால், அந்த கட்சியால் தனது வெற்றியை முழு அளவில் கொண்டாடவோ, அனுபவிக்கவோ முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு உள்ளது.