பவன் கல்யாண் படத்தில் இருந்து விலகிய பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார், பூஜா ஹெக்டே. இதனால் அவரால் பவன் கல்யாண் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவானதாக சொல்லப்படுகிறது.
பவன் கல்யாண் படத்தில் இருந்து விலகிய பூஜா ஹெக்டே
Published on

மும்பையில் பிறந்த பூஜா ஹெக்டே, தமிழ் மொழியில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'முகமூடி' படத்தில்தான் முதன் முதலாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தெலுங்கில் அறிமுகமான அவர், அங்கு மிகப்பெரிய இடத்தைப் பிடித்தார். இந்தி மொழியிலும் அவ்வப்போது நடித்து வந்தார்.

இந்த நிலையில் பான் இந்தியா மூவியான 'ராதே ஷ்யாம்', தமிழில் விஜய் நடிப்பில் உருவான 'பீஸ்ட்', தெலுங்கில் 'ஆச்சாரியா' ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களும் கடந்த மூன்று மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானதன் காரணமாக, இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக பூஜா ஹெக்டே மாறியிருக்கிறார். தற்போது அவர் இந்தியில் ரன்வீர்சிங் ஜோடியாக 'கிரிக்ஸ்' என்ற படத்திலும், சல்மான்கான் ஜோடியாக 'கபி ஈத் கபி தீவாளி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் படத்தில் நடிக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் படத்தை ஹரீஷ் சங்கர் இயக்குவதாக இருந்தது. இவர் பவன் கல்யாணை வைத்து 'கப்பர் சிங்' என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தவர். ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் ஆகியோரையும் வைத்து இயக்கியிருக்கிறார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் 'கட்டலகொண்டா கணேசன்.' தமிழில் பாபிசிம்ஹா மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் ரீமேக்தான் இது. இந்தப் படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும், பாபிசிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜூம் நடித்திருந்தனர். ஹரீஷ் சங்கர் இயக்கிய கடைசி இரண்டு படங்களிலும் பூஜா ஹெக்டேதான் கதாநாயகி. அதனால் அடுத்த படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தால், பவன் கல்யாண் படத்தை இயக்குவதில் ஹரீஷ் சங்கருக்கு தாமதம் உண்டானது. இதற்கிடையில் கிரிஷ் என்பவர் இயக்கத்தில் 'ஹரிஹர வீரமல்லு' என்ற படத்தில் நடிக்க போய்விட்டார், பவன் கல்யாண். அதற்குள் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார், பூஜா ஹெக்டே. இதனால் அவரால் பவன் கல்யாண் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவானதாக சொல்லப்படுகிறது. எனவே அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com