செயற்கை கையை வெற்றிகரமாக உருவாக்கிய பிரசாந்த்

மத்தியப்பிரதேசம் மாநிலம் கந்த்வா பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோபோடிக்ஸ் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். வேறொரு படிப்பை தேர்வு செய்து படிப்பதற்காக அந்த படிப்பை பாதியிலேயே கைவிட்டார். ஆனால், அவரது பாதையை ஒரு சோக சம்பவம் மாற்றியது.
செயற்கை கையை வெற்றிகரமாக உருவாக்கிய பிரசாந்த்
Published on

கையின்றி பிறந்த 7 வயது குழந்தையை கண்ட பிரசாந்த் மனம் கலங்கினார். அந்தக் குழந்தைக்கு உதவி செய்ய முன்வந்தார். ஆனால், அதில் பெரும் சிக்கல் இருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் கிடைத்தாலும் செயற்கை கையைப் பொருத்த முடியவில்லை. அதற்கு 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது.

அவ்வளவு தொகையை திரட்ட முடியாது என்பதால் செயற்கை கையை தாமே உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் பிரசாந்த். அவர் ஏற்கனவே ரோபோடிக்ஸ் துறையில் அனுபவம் கொண்டவர் என்பதால் செயற்கை கையை அவரால் வெற்றிகரமாக வடிவமைக்க முடிந்தது.

கடும் போராட்டங்களுக்குப் பிறகு செயற்கை கையை வெற்றிகரமாக உருவாக்கிய பிரசாந்த் அதை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இதற்காக இனாலி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கிறார். தற்போது வரை 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செயற்கை கைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரசாந்தின் முயற்சியால் செயற்கைக் கைகளை பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள். அவரின் செயற்கை கைகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சென்றடைந்திருக்கிறது. பிரசாந்தின் செயற்கைக் கைகள் மூளையின் சமிஞ்சைகளை பெற்று வேலை செய்கிறது. இதனால் கையை இழந்தவர்கள் செயற்கை கையின் துணையுடன் விரும்பிய விஷயங்களை செய்ய முடிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com