ஆயுள் காப்பீட்டு துறை சாராத காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய பிரிமிய வருவாய் 14% அதிகரிப்பு

2018-19-ஆம் ஆண்டில் ஆயுள் காப்பீடு சாராத காப்பீட்டு துறை நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.1.70 லட்சம் கோடி பிரிமிய வருவாய் ஈட்டி இருக்கின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீத வளர்ச்சியாகும்...
ஆயுள் காப்பீட்டு துறை சாராத காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய பிரிமிய வருவாய் 14% அதிகரிப்பு
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆயுள் காப்பீட்டு துறை சாராத காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 14 சதவீதம் அதிகரித்து ரூ.15,866 கோடியை எட்டி உள்ளது.

மொத்தம் 34 நிறுவனங்கள்

நம் நாட்டில், ஆயுள் காப்பீடு சாராத துறையில் மொத்தம் 34 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 25 நிறுவனங்கள் பொதுக்காப்பீட்டுத் துறையைச் சேர்ந்தவை. 7 நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும், 2 நிறுவனங்கள் சிறப்புக் காப்பீட்டு வசதியும் வழங்கி வருகின்றன.

இந்திய காப்பீட்டுத் துறையில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், எஸ்.பீ.ஐ. லைப், ஜி.ஐ.சி. ரீ மற்றும் எச்.டீ.எப்.சி. ஸ்டாண்டர்டு லைப் ஆகிய 5 நிறுவனங்கள் தமது பங்குகளை மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில்...

கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் ஆயுள் காப்பீடு சாராத காப்பீட்டு நிறுவனங்கள் (பொதுக்காப்பீடு மற்றும் சிறப்புக் காப்பீட்டு நிறுவனங்கள்) 17 சதவீத வளர்ச்சியுடன் ரூ.1.51 லட்சம் கோடியை ஒட்டுமொத்த பிரிமிய வருவாயாக ஈட்டி இருந்தன. முந்தைய ஆண்டில் (2016-17) அது ரூ.1.28 லட்சம் கோடியாக இருந்தது.

2018-19-ஆம் ஆண்டில் ஆயுள் காப்பீடு சாராத காப்பீட்டு துறை நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.1.70 லட்சம் கோடி பிரிமிய வருவாய் ஈட்டி இருக்கின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீத வளர்ச்சியாகும். இதில் 25 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு ரூ.1.50 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.1.33 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இப்பிரிவிலும் 13 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் ஆயுள் காப்பீடு சாராத காப்பீட்டு நிறுவனங்கள் மொத்தம் ரூ.15,866 கோடியை பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்த நிறுவனங்கள் ரூ.13,880 கோடி வருவாய் ஈட்டி இருந்தன.

இதில் 25 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு ரூ.14,949 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த நிறுவனங்கள் 13 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. பொதுக் காப்பீட்டுத் துறையில் பொதுத்துறையைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள் உள்ளன.

சிறப்புக் காப்பீடு

கணக்கீட்டுக் காலத்தில் 7 தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 36 சதவீதம் உயர்ந்து (ரூ.613 கோடியில் இருந்து) ரூ.832 கோடியாக அதிகரித்துள்ளது. சிறப்புக் காப்பீட்டுச் சேவையில் ஈடுபட்டு வரும் ஈ.சி.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி. ஆகிய நிறுவனங்கள் 14.5 சதவீத வளர்ச்சியுடன் ரூ.85.27 கோடி வருவாய் ஈட்டி இருக்கின்றன. 2018 ஏப்ரலில் அது ரூ.74.50 கோடியாக இருந்தது.

இந்தியாவில் ஏராளமான தொழிலகங்கள் நிறுவன பாணிக்கு மாறி வருகின்றன. இதனால் தீ விபத்து போன்ற இடர்பாடுகளுக்கு எதிராக மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக காப்பீட்டு வசதி செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு வருகிறது. எனவே பொதுக்காப்பீட்டுத் துறையின் மொத்த ஆண்டு பிரிமிய வருவாய், 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய பங்கு

பொதுக்காப்பீட்டு துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரிமிய வருவாய் வளர்ச்சியில் வேளாண் துறை முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேளாண் துறையில் இழப்பீட்டுக் கோரிக்கைகள் அதிகம் வருவதுண்டு. என்றாலும், அதனால் கிடைக்கும் பிரிமிய வருவாயில் சுமார் 75 சதவீதமே அவை என்பதால் பொதுக்காப்பீட்டுத் துறையின் வருவாய் வளர்ச்சிக்கு அவை வலுச்சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com