குடிசைப்பகுதிகளில் கல்வி விளக்கேற்றும் பேராசிரியர்

உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் குடிசைப் பகுதி மக்களுக்கு இன்னும் கூட கல்வியின் முக்கியத்துவம் குறித்த தெளிவு இல்லை. ஆகவேதான் அங்கு வாழும் இளம் வயதினரின் எதிர்கால வாழ்க்கை கல்வி கிடைக்காமல் தடம் மாறுகிறது.
குடிசைப்பகுதிகளில் கல்வி விளக்கேற்றும் பேராசிரியர்
Published on

விவரம் தெரியாத வயதில் படிப்பைக் கைவிடும் இளம் வயதினர் பின்னர் காலம் காலமாக கஷ்டப்பட வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினையை நேரடியாகக் கண்டவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த லலிதா ஷர்மா. இன்று அவரின் முயற்சியால் குடிசைப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மாறியிருக்கிறது. இவர் முன்னாள் சட்டக் கல்லூரி பேராசிரியர். 2009-ம் ஆண்டு இந்தூரில் இருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தார். அப்போது அருகில் இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்றார். அங்கு இளம் வயதினர் பலர் கல்வி பெறாமல் இருந்ததைக் கண்டார். படிப்பின் அவசியத்தை அறிந்திருந்ததால் அவர்கள் படிக்க உதவி செய்தார். கல்லூரியில் வேலை நேரம் போக தினமும் ஒரு மணி நேரம் அவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

தொடக்கத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே பாடம் எடுக்கப்பட்டது. பின்னாளில் படிக்க நிறைய பேர் வரத் தொடங்கினர். அவர்களுக்கும் சேர்த்து பாடம் எடுக்கப்பட்டது. இதற்காக அபா குன்ச் என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் மூலம் தன்னார்வலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. தற்போது ஆண்டுக்கு 500 பேருக்கு பேராசிரியர் லலிதா ஷர்மா படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். இன்றுவரை குடிசைப்பகுதியில் வாழும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறார்.

அவர்கள் தற்போது பொறியியல், மார்க்கெட்டிங், மருத்துவம் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி தன்னார்வ அமைப்புடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மொஹல்லா என்ற டிஜிட்டல் வகுப்பை அறிமுகம் செய்தார். தன்னார்வ அமைப்பு பணிகளுக்காக லலிதா ஷர்மா தனது சட்ட பேராசிரியர் பணியை உதறித்தள்ளினார்.

தற்போது முழு வீச்சுடன் குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் குழந்தை களைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் முயற்சியைப் பாராட்டி சர்வதேச அளவிலான பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com