மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு

புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னேற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 110 புள்ளிகள் அதிகரித்தது.
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
Published on

மும்பை

ஜனவரி மாதத்தில் நாட்டின் சேவைத் துறையின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்றும், அது 7 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம் எனவும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு உயர்ந்ததாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குகளில் முதலீடு செய்தனர். எனவே பங்கு வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.90 சதவீதம் உயர்ந்தது. அடுத்து தொலைத் தொடர்புத் துறை குறியீட்டு எண் 2.58 சதவீதம் அதிகரித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் டாட்டா ஸ்டீல், பார்தி ஏர்டெல், எச்.டீ.எப்.சி., டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எல் அண்டு டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட், மாருதி சுசுகி, ஏஷியன் பெயிண்ட், என்.டி.பி.சி. உள்பட 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 353.28 புள்ளிகள் அதிகரித்து 41,142.66 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,177 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,703.32 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,352 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,116 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 192 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,441 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.3,136 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 109.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,089.15 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,098.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,953.35 புள்ளிகளுக்கும் சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com