

புதுடெல்லி
நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மத்திய அரசிடம் ரூ.50,000 கோடி கூடுதல் மூலதனம் கோருவதாக தெரிய வந்துள்ளது.
கடும் நெருக்கடி
வாராக்கடன்களால் பொதுத்துறையைச் சேர்ந்த பல வங்கிகள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. எனினும் கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் இனி வரும் காலாண்டுகளில் இந்த வங்கிகள் லாப பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாராக்கடன்களைப் பொறுத்தவரை தனியார் வங்கிகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி-மார்ச் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. உதாரணமாக கார்ப்பரேஷன் வங்கி ரூ.6,581 கோடியை இழப்பாகக் கண்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிற்கு ரூ.2,477 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.
யூகோ வங்கி, மார்ச் காலாண்டில் ரூ.1,552 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.2,134 கோடியாக இருந்தது. ஆக, இவ்வங்கியின் இழப்பு குறைந்துள்ளது. முந்தைய காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) இழப்பு ரூ.999 கோடியாக இருந்தது.
பொதுத்துறை வங்கிகள் மத்திய அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கி கூடுதல் மூலதனம் பெற்று வருகின்றன. மூலதன விதிமுறைகளை நிறைவு செய்வது மற்றும் கடன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்த வங்கிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. அதே சமயம் எல்லா சமயங்களிலும் மூலதன சந்தையில் நிதி திரட்ட முடிவதில்லை.
பொதுத்துறை வங்கிகளுக்கு, சென்ற நிதி ஆண்டில் ரூ.65,000 கோடி கூடுதல் மூலதனம் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் ரூ.1.06 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
மூலதன தேவை
அந்த நிலையில், மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனம் 2019-20-ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் கூடுதல் மூலதன தேவை ரூ.20,000 கோடி முதல் 25,000 கோடி வரை இருக்கும் என்றும், கடன்களின் தரம் அதிகரித்து வருவதால் அந்த வங்கிகளின் நிதி தேவைப்பாடு பெரிதும் குறையும் என்றும் கூறி இருந்தது.
ஆனால், பொதுத்துறையைச் சேர்ந்த வங்கிகள் ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு மத்திய அரசிடம் கூடுதல் மூலதன உதவி கேட்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.