இளைஞர்களை தாக்கும் மனநோய்

இந்தியாவில் 4 இளைஞர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இளைஞர்களை தாக்கும் மனநோய்
Published on

குறிப்பாக 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. அவர்களை மனஅழுத்தத்தில் இருந்து மீட்கும் மிகப்பெரிய பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் இருக்கிறது.

* பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையில் சிக்கி மன வேதனையில் இருந்தால், அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் தவறே செய்திருந்தாலும் அந்த சமயத்தில் அது பற்றி விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சினையின் மூல காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூற வேண்டும். அவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும். பெற்றோரின் ஆதரவும், ஆறுதலும் அவர்களுக்கு மன வலிமையை கொடுக்கும். பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த பிறகு அவர்கள் செய்த தவறுகளை பொறுமையாக சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டும். இது பெற்றோரின் கடமையாகும்.

* வளரிளம் பருவத்திலேயே எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தவைக்க வேண்டும். அது கவன சிதறலுக்கு இடம் கொடுக்காது. தேவையற்ற மன அழுத்தத்திற்கும் ஆளாகமாட்டார்கள். இலக்குகளை அடைவதற்கான முயற்சியில் தோல்வியை எதிர்கொண்டால், பெற்றோர் பக்கபலமாக இருந்து தன்னம்பிக்கையூட்ட வேண்டும். அது மன அழுத்தத்தை போக்க உதவும்.

* மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் பிள்ளைகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவேண்டும். ஓய்வு நேரங்களை பிள்ளைகள் பயனுள்ள வழியில் செலவிடுவதற்கு பெற்றோர் வழிகாட்டியாக விளங்க வேண்டும். புத்தக வாசிப்பு, நடைப்பயிற்சி, வீட்டு வேலை, குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை அன்றாட பழக்கவழக்கங்களாக பின்பற்றவையுங்கள். அது அவர்களிடம் நேர்மறையான சிந்தனையை உருவாக்கும்.

* பெற்றோர் தங்கள் கருத்துகளை பிள்ளைகளிடம் திணிப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது மன குழப்பத்தில் இருந்தால் அதனை கவனித்து, தீர்வு காண முயல வேண்டும். சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.

* பெற்றோர் பிள்ளைகளுடன் நட்புறவோடு பழக வேண்டும். தக்க சமயத்தில் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவை அவர்களை விழிப்புடன் செயல்பட வைக்கும். அவர்களிடையே நிலவும் மன குழப்பங்களுக்கும் தீர்வு காண உதவும்.

* பெற்றோர் தாங்கள் கடந்து வந்த டீன் ஏஜ் பருவ வாழ்க்கையை பிள்ளைகளிடம் ஒப்பிட்டு பேசக்கூடாது. அந்த காலகட்டத்தில் தாங்கள் சந்தித்த கஷ்டங்களை கூறலாம். ஆலோசனை வழங்கலாமே தவிர அதனை பின்பற்றுமாறு நிர்பந்திக்கக்கூடாது. நிறை, குறைகளை சீர் தூக்கி பார்த்து செயல்படும் மன பக்குவம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்த்தாலே போதுமானது.

* பிள்ளைகள் கோபமாக இருக்கும்போது பெற்றோர் கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது. அவர்களை நண்பர்களை போல் வழி நடத்த வேண்டும். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

* பெரும்பாலானவர்களுக்கு மன பாதிப்பு வளரிளம் பருவத்தில் ஏற்பட தொடங்குகிறது. 25 வயதிற்கு முன்பே 75 சதவீதம் பேருக்கு மன நோய்கள் தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனை கருத்தில் கொண்டு இளம் பருவத்தை பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கழிக்க, பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com