பருப்பு இறக்குமதி 159% அதிகரிப்பு

டாலர் மதிப்பு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 159% அதிகரிப்பு
பருப்பு இறக்குமதி 159% அதிகரிப்பு
Published on

புதுடெல்லி

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் பருப்பு உற்பத்தி 2.8 சதவீதம் அதிகரித்து 2.35 கோடி டன்னாக இருக்கும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவாகும்...

மார்ச் மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 159 சதவீதம் அதிகரித்து 14 கோடி டாலராக இருக்கிறது.

இந்தியா முதலிடம்

பருப்பு உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. மழையை நம்பி இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.

உள்நாட்டில் பருப்பு நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.50 கோடி டன் என்ற அளவில் இருக்கிறது. அண்மைக் காலம் வரை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

தற்போது போதுமான அளவிற்கு உற்பத்தி இருந்தும் குறைந்த அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனினும், பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து வருவதால் இனி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.

56.50 லட்சம் டன்

முந்தைய நிதி ஆண்டில் (2017-18) மொத்தம் 56.50 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆனது. 2016-17-ஆம் நிதி ஆண்டில் அது 66.50 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, அளவு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 15 சதவீதம் குறைந்தது.

கடந்த நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில், டாலர் மதிப்பில் பருப்பு வகைகள் இறக்குமதி 85 சதவீதம் குறைந்தது. மே மாதத்தில் இறக்குமதி 87 சதவீதம் குறைந்தது. ஜூன் மாதத்தில் 82 சதவீதமும், ஜூலை மாதத்தில் 80 சதவீதமும் குறைந்து இருந்தது. ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் முறையே 62 சதவீதம், 56 சதவீதம் மற்றும் 53 சதவீதம் குறைந்தது. நவம்பர் மாதத்தில் 70 சதவீதம் குறைந்து இருந்தது. டிசம்பர் மாதத்தில் இறக்குமதி 28 சதவீதம் குறைந்தது. ஜனவரி மாதத்தில் 37 சதவீதம் அதிகரித்தது. பிப்ரவரியில் அது 2.75 சதவீதம் குறைந்தது.

மார்ச் மாதத்தில்...

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், ரூ.943 கோடிக்கு பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.341 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதே மாதத்தில் டாலர் மதிப்பு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 158 சதவீதம் அதிகரித்து (5 கோடி டாலரில் இருந்து) 14 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது.

பருப்பு மகசூலை அதிகரிக்கவும், புரதம் நிறைந்த பருப்பு வகைகளின் நுகர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-21-க்குள் பருப்பு உற்பத்தியை 2.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) பருப்பு விளைச்சல் 2.52 கோடி டன்னை தாண்டி இருந்தது.

நடவடிக்கைகள்

கடந்த ரபி பருவத்தில் (2018 அக்டோபர்-2019 மார்ச்) கூடுதலாக 15 லட்சம் டன் பருப்பு உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக முந்தைய நிதி ஆண்டில் பருப்பு விளைச்சல் 7.92 லட்சம் டன் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் பருப்பு உற்பத்தி 2.8 சதவீதம் அதிகரித்து 2.35 கோடி டன்னாக இருக்கும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மதிப்பீடு செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவாகும். மேலும், பறுப்பு இறக்குமதி 68 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அதிக உற்பத்தி இல்லாததால் நமது தேவையை நிறைவு செய்ய பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com