‘அரபிக் கடலின் ராணி’... கொச்சியின் புகழுக்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன?

இந்தியப் பெருங்கடல் வழியாக நடைபெற்ற நீண்டதூர கடல் வர்த்தகத்தில் கொச்சி முக்கிய இடத்தை பெற்றது.
கொச்சி
Published on

கொச்சி

இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொச்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும். கொச்சியின் புவியியல் அமைப்பு இயற்கையாக பாதுகாக்கப்பட்ட நீர்ப்பகுதிகளை கொண்டது என்பதால் இயற்கையாகவே அமைந்த துறைமுகம் என்ற சிறப்பு இதற்கு உண்டு.

அரபிக் கடலின் ராணி

கேரள மாநிலத்தில் விளைவிக்கும் மசாலா பொருட்களை கையாளும் சர்வதேச வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. அவைகளை பல்வேறு நாடுகளுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் சர்வதேச கடல் வர்த்தக பாதைகளுடன் இணைந்திருந்தது. வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் பன்முக கலாசார வாழ்க்கை சூழலுடன் பல நூற்றாண்டுகளாக பின்னிப்பிணைந்த கடல் வர்த்தகத்தின் நினைவுகளைப் பாதுகாத்து வருவதால் "அரபிக் கடலின் ராணி" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

வர்த்தகத்தின் முக்கிய மையம்

14-ம் நூற்றாண்டில் கொடுங்கல்லூர் துறைமுகம் தான் வர்த்தகத்தை கையாளுவதில் முதன்மை இடத்தில் இருந்தது. 1341-ல் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளத்தால் அந்த துறைமுகம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகே கொச்சியின் முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியதாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கொச்சி துறைமுகம் வளர்ந்தது. குறிப்பாக இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கடல் வழி வர்த்தகம் நடைபெற தொடங்கியது.

இயற்கையான துறைமுகம்

கொச்சியின் புவியியல் அமைப்பும், அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. தீவுகள் மற்றும் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட ஆழமான நீர்ப்பகுதிகள் இங்கு இருப்பதால் பெரிய கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஏற்ற சூழலை கொண்டிருந்தது. குறிப்பாக பருவமழை காலத்திலும் கப்பல் போக்குவரத்துக்கு இந்த இயற்கையான அமைப்பு உதவியது. இதனால் இந்தியப் பெருங்கடல் வழியாக நடைபெற்ற நீண்டதூர கடல் வர்த்தகத்தில் கொச்சி முக்கிய இடத்தை பெற்றது.

வர்த்தக நடவடிக்கை

கொச்சியின் வர்த்தக முக்கியத்துவம் அதிகரித்தபோது ஐரோப்பிய நாடுகளின் கவனமும் அதன் மீது திரும்பியது. போர்த்துகீசியர்கள் 1503-ம் ஆண்டு கொச்சியில் தங்களது குடியேற்றத்தை நிறுவினர். பின்னர் டச்சுக்காரர்களும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களும் கொச்சியின் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பயணிகள் கொச்சிக்கு வந்து சென்றனர். இதனால் கொச்சி நகரம் பல்வேறு கலாசாரங்கள் சந்திக்கும் இடமாக மாறியது.

பன்முக கலாசாரம்

கொச்சியின் தனிச்சிறப்பு அதன் வர்த்தக வரலாற்றில் மட்டுமல்ல. அதன் கலாசாரத்திலும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக போர்ட் கொச்சி மற்றும் மட்டாஞ்சேரி பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வெளிநாட்டு தொடர்புகளின் தாக்கத்தை இன்றும் காணலாம். போர்த்துகீசியர் கால தேவாலயங்கள், டச்சு கட்டிடங்கள், வரலாற்று சிறப்புமிக்க யூத ஜெபக்கூடம் மற்றும் கடல் பகுதியில் காணப்படும் சீன மீன்பிடி வலைகள் ஆகியவை கொச்சியின் பன்முக கலாசார வரலாற்றை பறைசாற்றுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com