

தென்னிந்தியாவில் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் பெரும்பான்மையாக செம்மரங்கள் காணப்படுகின்றன. இவை செஞ்சந்தனம், பிசனம், கணி, ரத்த சந்தனம், உதிர சந்தனம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் செம்மரங்கள் வளர்கின்றன.
இவை முட்புதர் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ள மத்திய தக்காணபீடபூமியில் 500 அடி முதல் 3 ஆயிரம் அடிக்கு இடைப்பட்ட பகுதியில் வளர்கின்றன. இதன் அறிவியல் பெயர் டெரோகார்பஸ் சந்தாலினஸ் ஆகும். 3 ஆண்டு முதல் 4 ஆண்டுக்குள் 8 மீட்டர் அல்லது 10 மீட்டர் உயரம் வரை வளர்ந்துவிடும். ஆனால் அதன்பிறகு வளர்ச்சி குறையும். எனினும் சராசரியாக 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் வரை கூட நீடித்து வளரும் என்று கூறப்படுகிறது.
இந்த வகை மரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 750 மீட்டர் உயரம் உள்ள கரிய களிமண் நிலத்தில் வளர்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஓரளவுக்கு உலர்ந்த காலநிலையே தேவைப்படுகிறது. இந்த மரத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தில் அலை அலையான வடிவங்கள் காணப்படும். இந்த அலை வடிவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தரமும், மதிப்பும் உயர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குறிப்பிட தகுந்த இடம் செம்மரத்துக்கு இருக்கிறது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய் நறுமணம் மிக்கதும், மருத்துவ பயன் கொண்டதும் ஆகும். மேலும் சிலைகள், மரப்பாச்சி பொம்மைகள், தேர் சிற்பங்கள் போன்றவற்றை தயாரிக்க செம்மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இது தவிர முக்கியமாக அணு கதிர்வீச்சை தாங்கும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர் வீச்சை தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்களாம். ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர் போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளில் மருத்துவர்கள் கதிர்வீச்சை தடுப்பதற்காக, செம்மரத்துண்டை தங்கள் சட்டை பையில் வைத்துகொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒலி அலைகளை தடுக்கும் திறன் கொண்ட இவ்வகை மரங்கள் வெப்பத்தையும் அதிகளவில் கடத்துவதில்லை. இந்த மரத்தை கரையான் அரிக்காது. இதுபோன்ற சிறப்புகள் இருப்பதால்தான், அதன் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
சீனா மற்றும் ஜப்பானில் செம்மரத்தால் செய்யப்பட்ட அறைகலன்கள், செஸ் விளையாட்டு பொருட்கள், இசை கருவிகள் ஆகியவற்றை வைத்திருப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இதனால் சந்தையில் செம்மரத்தின் விலை ஒரு டன் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை உள்ளது. இதன் காரணமாகவே அவை கடத்தப்படுகிறது. அதாவது சென்னை மற்றும் மும்பையில் இருந்து கடல் மார்க்கமாகவும், நேபாள எல்லையில் சாலை மார்க்கமாகவும் சென்று சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகம் காணப்படும் செம்மரங்கள், கிழக்கு மலைக்குன்றுகளில் செழித்து வளர்கின்றன. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மற்றும் ஆந்திராவில் கர்நூல், கடப்பா, குண்டூர், கோதாவரி, சித்தூர் மாவட்டங்களில் செம்மரங்கள் அதிகம் உள்ளன. கர்நாடகாவிலும் சில இடங்களில் இருக்கின்றன. அதன்படி தென்னிந்தியாவில் மொத்தம் 5,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்தான் செம்மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் செம்மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றம். மேலும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அவை வெட்டி கடத்தப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இனிவரும் காலங்களில் போர்க்களத்தில் அணு ஆயுதங்களின் தாக்கம் இருக்கலாம். அதுபோன்ற சூழலில் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் பேராயுதமான செம்மரங்கள் அதிகளவில் இருந்தால் உயிர்கள் அழிவது ஓரளவுக்காவது கட்டுப்படுத்தப்படும். இதை அனைவரும் உணர்ந்து செம்மரங்களை வெட்டுவதை தடுக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கைகோர்ப்போம்...!